/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செம்மண் கடத்தல்: உருவானது 'குளம்'
/
செம்மண் கடத்தல்: உருவானது 'குளம்'
ADDED : பிப் 18, 2025 07:00 AM

பல்லடம்; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொட்டம்பட்டி கிராமத்தில், ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில் சரஸ்வதி கார்டன் பகுதி உள்ளது.
இந்த மனைப்பிரிவு பயன்பாடின்றி உள்ளது. இரவு நேரத்தில், இதன் ரிசர்வ் சைட்டில், தொடர்ச்சியாக மண் எடுக்கப்பட்டு வருகிறது. செம்மண் டிப்பர் ஒன்று, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில், நுாற்றுக்கணக்கான யூனிட் செம்மண் இங்கிருந்து கடத்தப்பட்டுள்ளது. பல அடி ஆழத்துக்கு செம்மண் அள்ளப்பட்டதால், இப்பகுதியில் 'குளம்' உருவாகியுள்ளது.
மண் அள்ளுவதற்காக இங்குள்ள சில மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. டிப்பர் லாரிகள், அகழ் இயந்திரங்கள் வந்து செல்ல வசதியாக, இப்பகுதியில் பிரத்யேக வழித்தடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், ''இரவு நேரங்களில்தான் பெரும்பாலும் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. கனிம வள கடத்தல் அதிகாரிகள் யாருக்கும் தெரியவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துகிறது'' என்றனர்.
மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதனை தொடர்பு கொண்ட போது, அவர் மொபைல்போன் அழைப்பை ஏற்கவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து, செம்மண் கடத்தல்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.