/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் கடைகள்: 'தாட்கோ' அமைக்கிறது
/
பஸ் ஸ்டாண்டில் கடைகள்: 'தாட்கோ' அமைக்கிறது
ADDED : செப் 07, 2025 10:41 PM

பல்லடம்; பல்லடம் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டிருந்த ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துக்கு (தாட்கோ) சொந்தமான, 9 கடைகளுடனான கட்டடம் பழுதடைந்தது. இதனால், கடந்த, 2014ம் ஆண்டு முதல் கடைகள் செயல்படவில்லை.
இரண்டு ஆண்டுகள் முன், பழுதான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. புதிய வணிக வளாகம் கட்டப்படும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், பயன்பாடு இன்றி கிடந்தன. புதிய கடைகள் கட்டி விற்பனைக்கு விடுவதன் மூலம், 'தாட்கோ' மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் கிடைப்பதுடன், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர் என வலியுறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம், தாட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில், புதிய கடைகள் கட்ட பூமி பூஜை நடந்தது. 'தாட்கோ' செயல் அலுவலர் மூர்த்தி தலைமை வகித்தார்.
அவிநாசி முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் ராமமூர்த்தி, பல்லடம் நகராட்சி கவுன்சிலர் சசிரேகா உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் 'தாட்கோ' நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம், 18 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள், 11 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் 'தாட்கோ' சார்பில் கடைகள் அமைய உள்ளன.