/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
24 மணி நேரமும் கடை திறப்பு; வணிகர்கள் வரவேற்பு! நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
/
24 மணி நேரமும் கடை திறப்பு; வணிகர்கள் வரவேற்பு! நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
24 மணி நேரமும் கடை திறப்பு; வணிகர்கள் வரவேற்பு! நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
24 மணி நேரமும் கடை திறப்பு; வணிகர்கள் வரவேற்பு! நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 30, 2025 06:57 AM
ADDED : ஆக 30, 2025 01:00 AM

- நமது நிருபர் -
ஆயத்த ஆடை தொழிலின் முக்கிய கேந்திரமாக விளங்கும் திருப்பூரில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசிக்கின்றனர். துணிக்கடை, காய்கறிக்கடை, பேக்கரி, மளிகைக்கடை என, ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்களும் இங்கு உள்ளன.
கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து ஏற்கனவே தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. திருப்பூர் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பயணிகள் வருகை தரும் இடங்களில் கூட, இரவில் கடைகளை முன்னதாகவே மூடும்படி போலீசார் அறிவுறுத்துவதாக புகார் உள்ளது.
இந்நிலையில், 'அரசாணை குறித்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் கடை திறப்புக்கு அனுமதி நடைமுறைப்படுத்துகிறதா, திட்டம் வரவேற்புக்குரியதா என்பது குறித்து வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கருத்துகள், இதோ...
'குடி'மகன்கள் தொல்லை
கோவை, சென்னை போல், திருப்பூரும் பெரும் தொழில் நகரம் தான். ஆயத்த ஆடைத் தொழில் சிறப்பாக இருந்த காலகட்டத்தில், பேக்கரி, டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட கடைகள், 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டு தான் இருந்தது. பகலில் பணிக்கு செல்லும் பலர், இரவில் பகுதி நேர வேலை செய்து, கூடுதல் வருமானம் ஈட்டி வந்தனர். இடையில் விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, மீண்டும், 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது; இது வரவேற்கத்தக்கது. தற்போது, அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு விட்டது. வீதிக்கு வீதி போலீசாரும் ரோந்து செல்கின்றனர். இரவில், மதுபானம் அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவோரால் தான் பிரச்னை ஏற்படுகிறது. அவ்வாறு இல்லாமல், இருந்தால் இரவு நேர வியாபாரம் சிறக்கும்.
- குளோபல் பூபதி, திருப்பூர் மாவட்ட தலைவர்,தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை.
---
பயணிகளுக்காக அவசியம்
எங்கள் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா, முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான், 24 மணி நேரம் கடை திறக்கும் அனுமதியை அரசு வழங்கியது. திருப்பூரை பொறுத்தவரை, தொழில் சற்று மந்தமாக உள்ள நிலையில், இரவு நேரங்களில் ஓட்டல், டீக்கடை, பேக்கரி உள்ளிட்டவை திறந்து வியாபாரம் செய்வது, வரவேற்புக்குரியது தான். இரவு முழுக்க வியாபாரம் காரணமாகவும், சொந்த வேலை காரணமாகவும் பலரும் வாகனங்களில் பயணிக்கின்றனர்; அவர்களின் களைப்பு போக்க, இரவு நேரம் கடைகள் திறந்திருப்பது அவசியம். அரசும், காவல்துறையும் உரிய ஒத்துழைப்பை வழங்கினால், இரவு நேர கடைகள் செயல்பாட்டில் எந்த பிரச்னையும் இருக்காது.- கணேசன், திருப்பூர் மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு---
ஊரகப்பகுதிகளில் வேண்டாம்
கோவை - சேலம் நெடுஞ்சாலையை ஒட்டிய அவிநாசியில், இரவு, 11:00 மணிக்கெல்லாம் டீக்கடை, பேக்கரி, ஓட்டல் ஆகியவற்றை அடைத்து விடுகின்றனர். இதனால், நெடுஞ்சாலை பயணம் மேற்கொள்வோர் களைப்பாறி, இளைப்பாற வாய்ப்பின்றி தவிக்கின்றனர். எனவே, நெடுஞ்சாலை, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொதுமக்கள், பயணிகள் அதிகம் புழங்கும் இடங்களில் உள்ள கடைகளை, இரவில் திறந்து வைப்பது வரவேற்புக்குரியது. மாறாக, நகரை ஒட்டிய ஊரகம் மற்றும் பிற ஊரகப் பகுதிகளில், அனைத்து இடங்களிலும் உள்ள கடைகளையும் திறக்க வேண்டிய அவசியமில்லை.
- முத்துக்குமரன், தலைவர்,அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம்.
---
நடைமுறையில் உள்ளதுதான்
கொரோனாவுக்கு முன் வரை, 24 மணி நேரமும் கடைகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தது. குறிப்பாக, டீக்கடை, ஓட்டல்கள் திறந்திருந்தன. கொரோனா காரணமாக, கூட்டம் ஓரிடத்தில் குவிவதை தவிர்க்க, அந்த நடைமுறை கைவிடப்பட்டது. வணிகர் சங்க, 42வது மாநாட்டில், முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது வரவேற்புக்குரியதே. இருப்பினும் நெடுஞ்சாலை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட, கூட்டம் அதிகம் சேரும் இடங்களில் சில கடைக்காரர்கள், இரவு முழுக்க கடை திறந்து வியாபாரம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.- ஜான் வல்தாரீஸ்,திருப்பூர் மாநகர தலைவர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.
---
பெரியளவில் பயன் தருமா?
மெட்ரோபாலிடன் நகரங்களில் மட்டுமே, 24 மணி நேரம் கடைகள் திறந்திருப்பது சாத்தியம். அங்கு, மால் உள்ளிட்டவை கூட இரவு நேரங்களில் இயங்கும் வாய்ப்புண்டு. ஆனால், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இது, பெரியளவில் பலன் தருமா என்பது கேள்விக்குறிதான். இதனால் தான் திருப்பூரில், இரவு நேரம், கடைகள் பெரும்பாலும் திறக்கப்படுவதில்லை. திருப்பூர் நகரம் மற்றும் பல்லடம் போன்ற நெடுஞ்சாலையை ஒட்டிய இடங்களில் பேக்கரி, ஓட்டல்களுக்கு வேண்டுமானால் இந்த உத்தரவு பயனளிப்பதாக இருக்கும்.- - பானு பழனிசாமி, செயல் தலைவர்பல்லடம் வியாபாரிகள் சங்கம்---
டீக்கடை, ஓட்டல்களுக்கு 'ஓகே'
திருப்பூரை பொறுத்தவரை சமீப ஆண்டுகளாக, சினிமா தியேட்டர், மால்கள் கூட முழு நேரம் இயங்குவதில்லை; போதிய வருவாய் இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். மாறாக டீக்கடை, ஓட்டல்களுக்கு வேண்டுமானால் ஓரளவு பலன் தரலாம். மாறாக, 24 மணி நேர கடைகள் திறப்பு என்பது, ஐ.டி., நிறுவனங்கள் உள்ளிட்ட இரவு நேரங்களில் இயங்கும் தொழில் கூடங்கள் நிறைந்த பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட சில பெரு நகரங்களுக்கு மட்டுமே முழுமையாக பொருந்தும்.- கண்ணையன், தலைவர், பல்லடம் கிளைதமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு---
கூடுதல் வியாபாரம் நடக்கும்
24 மணி நேரமும் கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்குவது, டீக்கடை, ஓட்டல்களுக்கு பலன் தருவதாக இருக்கும். அதன் வாயிலாக அவர்களுக்கு கூடுதல் வியாபாரம் நடக்கும்; இதனால், பேக்கரி, டீக்கடைகளுக்கு தேவையான மளிகை பொருட்களை அவர்கள் வழக்கத்தை விட அதிகமாக வாங்குவர்; இது, மளிகை் கடைக்காரர்களுக்கும் வியாபாரம் கூடுதலாக நடக்கும்.
- தங்கவேல், தலைவர்,அவிநாசி மளிகை வியாபாரிகள் சங்கம்
விதிமுறைப்படி செயல்படும்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: 24 மணி நேரம் கடைகள் இயங்க அனுமதி என்பது, ஏற்கனவே, நடைமுறையில் இருப்பது தான். இரவு நேரத்தில் கடை திறப்போர், சட்ட விதிக்குட்பட்டு செயல்பட வேண்டும். 10 பேருக்கு மேற்பட்டவர்கள் பணிபுரிய வேண்டும்; பெண் ஊழியர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்த விதிமுறைக்கு உட்படும் ஓட்டல் உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அனுமதிக்கு உட்பட்டு செயல்படும் கடைகளுக்கு இடையூறு இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நமது நிருபர் -