/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கலுாரில் கடையடைப்பு; உண்ணாவிரதம் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு
/
பொங்கலுாரில் கடையடைப்பு; உண்ணாவிரதம் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு
பொங்கலுாரில் கடையடைப்பு; உண்ணாவிரதம் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு
பொங்கலுாரில் கடையடைப்பு; உண்ணாவிரதம் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு
ADDED : அக் 03, 2025 09:56 PM

பொங்கலுார்; சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொங்கலுாரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. வியாபாரிகள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
பொங்கலுார், பல்லடம் வழியாகச் செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (என்.எச் - 67) சில ஆண்டுகள் முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது பொங்கலுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அகற்றப்பட்டது.
தற்போது மீண்டும் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதற்கு பொங்கலுார் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி எல்லையில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி பல்லடம் நகராட்சியில் இருந்து ஐந்தாவது கிலோமீட்டரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது; சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று நேற்று பொங்கலுார் கடைவீதியில் வணிகர்கள் தங்கள் நிறுவனங்களை மூடி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கின. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு உணவகங்கள், பேக்கரிகள் செயல்படுகின்றன. அவை நேற்று அடைக்கப்பட்டு இருந்ததால் அவ்வழியாக வெளியூருக்கு செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். வெயில் உக்கிரமாக இருந்ததால் ஆங்காங்கே மரத்தடியில் செயல்பட்ட இளநீர் கடைகளுக்கு பயணிகள் வருகை அதிகரித்தது.
பொங்கலுார் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் காலை முதல் மாலை வரை உண்ணா விரத போராட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், கொ.ம.தே.க மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, பொங்கலுார் முன்னாள் ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியம், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.