/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலுவலர்கள் எண்ணிக்கை பற்றாக்குறை; ஆதார் மையத்தில் அதிகரிக்கும் கூட்டம்
/
அலுவலர்கள் எண்ணிக்கை பற்றாக்குறை; ஆதார் மையத்தில் அதிகரிக்கும் கூட்டம்
அலுவலர்கள் எண்ணிக்கை பற்றாக்குறை; ஆதார் மையத்தில் அதிகரிக்கும் கூட்டம்
அலுவலர்கள் எண்ணிக்கை பற்றாக்குறை; ஆதார் மையத்தில் அதிகரிக்கும் கூட்டம்
ADDED : ஜூன் 10, 2025 11:20 PM

திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையத்துக்கு, ஆதார் திருத்தத்துக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதிய அலுவலர்கள் பணியில் இல்லாததால், ஆதார் பதிவில் சுணக்கம் ஏற்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 'எல்காட்' கட்டுப்பாட்டில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிரந்தர ஆதார் பதிவு மையம் செயல்படுகிறது. ஆதார் புதுப்பிப்பதற்காக இம்மையத்துக்கு, பொதுமக்கள் தினமும் 30க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
கோடை விடுமுறைக்குப்பின், கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (ஆர்.டி.இ.,) கல்வி கட்டண சலுகை பெறுவதற்கு, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்காக, பள்ளி நிர்வாகங்கள், மாணவ, மாணவியரின் ஆதார் விவரங்களை பெற்று வருகின்றன.
இதுதவிர, ரேஷனில் கைரேகை பதிவு சிக்கல் காரணமாகவும், பத்து ஆண்டுக்கு முன் ஆதார் பதிவு செய்தோர், 'பயோமெட்ரிக்' அப்டேட் செய்து வருகின்றனர். ஆதாரில் முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், பயோமெட்ரிக் புதுப்பித்தால், புதிய ஆதார் பதிவுக்காக பெரும்பாலானோர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மையத்தையே நாடுகின்றனர். இதனால், கடந்த ஒரு வாரமாக, ஆதார் மையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பலரும் காலை, 8:30 மணி முதலே, ஆதார் மையம் முன், இருக்கையில் வந்து அமர்ந்து விடுகின்றனர். அவர்களுக்கு, காலை, 10:00 மணி முதல், டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையில் நிறுத்தப்படுகின்றனர்.
டோக்கன் அடிப்படையில், ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டு, உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, ஆதாரில் திருத்தத்துக்கு பதிவு செய்யப்படுகிறது. தற்போது, தினமும், 45 பேருக்கு ஆதாரில் திருத்தம், புதிய பதிவு செய்யப்பட்டு வருகிறது.
காலை, 11:00 மணிக்கு துவங்கி மாலை, 6:00 மணி வரை பதிவு நடைபெறுவதால், ஆதார் மையம் முழு நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது.
கலெக்டர் அலுவலக ஆதார் மையத்தில், ஆதார் பதிவுக்கு இரண்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இவ்விருவரும் விடுப்பில் சென்றுள்ளனர். திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக மைய அலுவலரே, கலெக்டர் அலுவலக மையத்தில் ஆதார் பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.
இதனால், ஆதார் பதிவில், மேலும் காலதாமதம் ஏற்படுகிறது. அதேபோல், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையம், கடந்த இரண்டு நாட்களாக பூட்டப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக ஆதார் மையத்துக்கு கூடுதல் அலுவலர்களை நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால், மேலும் ஒரு புதிய மையத்தை உருவாக்கி, ஆதார் பதிவை வேகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்பு முகாமை பயன்படுத்துங்க...
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில் நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் செயல்படுகின்றன. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர் வசதிக்காக, இம்மையங்களில் சுழற்சி முறையில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், மாணவர்கள், தங்கள் தாலுகாவில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, மிக சுலபமாக ஆதாரில் திருத்தங்கள் செய்துகொள்ளலாம். அந்தவகையில், வரும் 15 ம் தேதி, தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.