/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டிய இயற்கை நீர் வழித்தடங்கள்; பருவ மழைக்கு முன் துார்வார வலியுறுத்தல்
/
புதர் மண்டிய இயற்கை நீர் வழித்தடங்கள்; பருவ மழைக்கு முன் துார்வார வலியுறுத்தல்
புதர் மண்டிய இயற்கை நீர் வழித்தடங்கள்; பருவ மழைக்கு முன் துார்வார வலியுறுத்தல்
புதர் மண்டிய இயற்கை நீர் வழித்தடங்கள்; பருவ மழைக்கு முன் துார்வார வலியுறுத்தல்
ADDED : செப் 18, 2024 08:39 PM
உடுமலை : வட கிழக்கு பருவ மழைக்கு முன், உடுமலை நகரிலுள்ள ஓடைகளை துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகராட்சியில், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், நாராயணன் காலனி ஓடை, நெடுஞ்செழியன் காலனி ஓடை, ராஜவாய்க்கால் பள்ளம் என, 10 கி.மீ., துாரம் இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ளன.
மழைக்காலங்களில் எளிதாக, வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த ஓடைகள் மீதான அலட்சியம் காரணமாக, ஆக்கிரமிப்புகளால் குறுகியும், சாக்கடை கழிவு நீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.
பருவ மழை காலங்களில், வெள்ள நீர் வடிய வழியில்லாமலும், கழிவுகள் அடைத்து, குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது.
தற்போது, வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், ஆண்டு மழைப்பொழிவில், அதிக பங்களிப்பு உள்ள பருவ மழை என்பதாலும், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
அதோடு, நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டுள்ளன.
மழை பெய்து, வெள்ள நீர் வடிய வழியில்லாமல், ரோடுகளில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், உடுமலை நகராட்சியிலுள்ள, ஓடைகள் மற்றும் பிரதான ரோடுகளிலுள்ள மழை நீர் வடிகால்களை மீட்டு, துார்வார வேண்டும்.