/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிலம்பம் சுற்றினார் சிறப்பை எட்டினார்
/
சிலம்பம் சுற்றினார் சிறப்பை எட்டினார்
ADDED : நவ 14, 2024 04:50 AM

சின்ன வயதில் சிலம்ப விளையாட்டின் மீது காட்டிய ஆர்வம், தொடர் பயிற்சியின் விளைவாக, 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டு போட்டியில், மாவட்ட அளவில் தடம் பதித்திருக்கிறார், அரசுப்பள்ளி மாணவர் பத்மநாபன்.
திருப்பூர், மண்ணரை, சத்யா காலனியில் வசிப்பவர் பத்மநாபன்; கே.எஸ்.சி., பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படிக்கிறார். பெற்றோர் இருவரும் பனியன் தொழிலாளிகள்; தான் சிறுவனாக இருக்கும் போதே, சிலம்ப விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். தனது, 10 வயதில், முத்தமிழ் சிலம்ப பயிற்சி கூடத்தில் இணைந்து, சிலம்பம் கற்க துவங்கினார். தொடர் பயிற்சி, விடா முயற்சியால், சிறு வயதிலேயே சிலம்ப விளையாட்டில் சிறப்புற விளங்குகிறார். கோவில் விழா உட்பட ஆங்காங்கே நடக்கும் போட்டிகளில் பங்கெடுத்து, தன் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் வழங்கி, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளிலும் சிலம்பம் இடம்பெற்றுள்ளது. இம்முறை நடந்த போட்டியில், 372 பேர் பங்கேற்றனர். இதில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், திருப்பூர் மாவட்ட அளவில் பத்மநாபன் முதலிடம் பெற்றார்.
பத்மநாபன் கூறுகையில் ''நான் சின்ன பையனா இருக்கும் போதே, சிலம்பம் மீது எனக்கு ரொம்ப ஆசை. அப்போ எல்லாம் கோவில் விழா மாதிரியான மேடைகளில் சிலம்பம் விளையாடுவேன். என் திறமையை பாராட்டி டிபன் பாக்ஸ், தட்டு, டம்ளர்ன்னு பரிசுப் பொருட்கள் தருவாங்க. இப்போ, மாநிலவிளையாட்டுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறதால, எங்களை போன்றவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு,'' என்றார்.

