/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இவ்வளவு நாளாக மவுனம்; இப்போது மட்டும் வேகம்
/
இவ்வளவு நாளாக மவுனம்; இப்போது மட்டும் வேகம்
ADDED : பிப் 07, 2024 11:31 PM

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோட்டை செப்பனிடுமாறு பல நாட்களாக வலி யுறுத்தியும் கண்டு கொள்ளாத நிலையில், அமைச்சர் உதயநிதி வருகையையொட்டி அவசர கதியில் அதிகாரி கள் சீரமைக்கத் துவங்கி யுள்ளனர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி சாலையில், தினசரி பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம், மங்கலம், அவிநாசி உள்ளிட்ட இடங்களுக்கும், இச்சாலை வழியாக வாகனங்கள் பயணிக்கின்றன.
இதுதவிர, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிப்பதால், இச்சாலை எந்நேரமும் 'பிஸி'யாகவே இருக்கும். இந்நிலையில், கடந்த, 4 ஆண்டுக்கு முன் இச்சாலை புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த, இரு ஆண்டுக்கு முன், குழாய் பதிக்கும் பணிக்காக, தோண்டப்பட்டது.
தோண்டப்பட்ட குழி, சரிவர மூடப்படாததால், சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் பெரிதும் பாதித்தனர். சாலையில் புழுதி கிளம்பியதால், அப்பகுதி புழுதிக்காடாக மாறியது. சாலையை செப்பனிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது சாலை செப்பனிடும் பணி துவங்கியுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,'சிக்கண்ணா கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி பங்கேற்க உள்ளதால் தான், அவசர கதியில் சாலை செப்பனிடும் பணி நடக்கிறது,' என்றனர்.

