/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஐ.ஆர். படிவம் வினியோகம் நிறைவு
/
எஸ்.ஐ.ஆர். படிவம் வினியோகம் நிறைவு
ADDED : நவ 24, 2025 05:51 AM

திருப்பூர்: இன்னும் பத்து நாட்களே உள்ள அவகாசம் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்களுக்கு தீவிரத் திருத்தப் படிவங்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இவற்றைப் பூர்த்தி செய்து பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழகம் உள்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில், வாக்காளர்களுக்கு வீடு தேடிச் சென்று, தீவிர திருத்த படிவம் வழங்கும் பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) 2,536 பேர், வாக்காளர் வீடு தேடிச் சென்று படிவம் வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டிச. 4 கடைசி நாள்
பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க, வரும் டிச. 4ம் தேதி கடைசிநாள். இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை பெறுவது மற்றும் பெறப்படும் படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
மாவட்டத்தில், இறந்த வாக்காளர், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர் தவிர மற்ற அனைத்து வாக்காளர்களுக்கும், தீவிர திருத்த படிவம் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களும் தகவல் அறிந்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகின்றனர்.
தொகுதிக்கு ஒருவர் வீதம் வாக்காளர் பதிவு அலுவலர் 8 பேர்; 27 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 266 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் மற்றும் வருவாய்த்துறை, கூட்டுறவு, வட்டார வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி, வேளாண், தோட்டக்கலைத்துறை என, பல்வேறு அரசு துறையினர், இரவு பகல் பாராமலும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களிலும், முழு வீச்சில் தீவிர திருத்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

