/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...
/
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...
ADDED : ஜன 13, 2024 01:37 AM

திருப்பூர்;'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...' என்ற பாசுரம் பாராயணத்துடன், மார்கழி பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கூடாரவல்லி உற்சவம் நேற்று, கோலாகலமாக நடந்தது.
கண்ணபிரானையே, கணவனாக அடைய வேண்டுமென, ஆண்டாள் நாச்சியார், மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தார். அதிகாலையில் எழுந்து நீராடி, தன்னை வருத்திக்கொண்டு கிருஷ்ணரை வணங்கி, இறைவனின் பேரருளை பெற்றார். மார்கழி மாதம் 26 நாட்கள் திருப்பாவை நோன்பு இருந்த ஆண்டாளை மணப்பதாக, பக்திக்கு இறங்கிய பரந்தாமன் வாக்களித்த, 27வது நாளில், கூடாரவல்லி உற்சவ நாள் கொண்டாடப்படுகிறது.
இது, தங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்ப செய்யும் ஆற்றல் கொண்ட கூடாரை வெல்லும் உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று காலை, கூடாரை வெல்லும் உற்சவமும், மாலையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
ஆண்டாள் வாக்களித்தபடி, அக்காரவடிசில் படைத்து, பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். கூடாரை கூட வைக்கும் திருநாளான நேற்று, 28 வது பாசுரமான, 'கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா' என்ற பாடலை பாடி பக்தர்கள் வழிபட்டனர்.
திருப்பூர் ராயபுரம் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடந்த விழாவில், கூடாரை வெல்லும் உற்சவமும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. பாவை நோன்பு கடைபிடித்து வரும் பக்தர்களும், நேற்றைய கூடாரவல்லி உற்சவத்தில் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.
அவிநாசியிலுள்ள பூதேவி நீலாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கூடாரை வெல்லும் சீர் விழா நடைபெற்றது. துளசி மாடம் அருகே ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்களுக்கு வளையல், மஞ்சள் சரடு ஆகியன வழங்கப்பட்டது.