ADDED : நவ 28, 2025 03:38 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் பெரும் குளறுபடி நிலவுகிறது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மா.கம்யூ., வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்ட -மா.கம்யூ., செயற்குழுக் கூட்டம் மதுசூதனன் தலைமையில் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் மூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், தற்போது நடந்துவரும் எஸ்.ஐ.ஆர்., பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
பல மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். தற்போது நடக்கும் எஸ்.ஐ.ஆர். பணியில் இது போன்ற வெளி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் பெறுவது மற்றும் பதிவேற்றம் செய்வதில் பெரும் குளறுபடி நிலவுகிறது.
இதில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். பல்வேறு துறை அரசு ஊழியர்கள் இதில் ஈடுபட்டுள்ளதால், வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன. இதனால் பல தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அடிக்கடி வீடு மாறுவோர்; தொகுதி மாறுவோர் என பல வகையிலான வாக்காளர்களுக்கு படிவம் வழங்குவது, பூர்த்தி செய்து திரும்ப பெறுவது மற்றும் ஆவணம் இணைப்பது என பல சிக்கல் உள்ளது. உரிய ஊழியர்கள்; முந்தைய பட்டியல் பார்வையிட வசதி இல்லாதது போன்றவையும் உள்ளன. இதற்கான கால அவகாசம் வழங்கி இதை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

