/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் அலுவலர்கள் முனைப்பு
/
எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் அலுவலர்கள் முனைப்பு
ADDED : நவ 23, 2025 07:12 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும், நேற்று பொது இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி, கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. வாக்காளரின் முழு விவரம் அடங்கிய கணக்கீட்டு படிவம், வீடு வீடாக வழங்கப்பட்டது. அதில், ஆதார் உள்ளிட்ட விவரங்கள், தந்தை, தாய், கணவர் அல்லது மனைவியின் வாக்காளர் அட்டை விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
தொடர்ந்து, 2002 பட்டியல் திருத்தத்துக்கு பிறகு இடம்பெற்றிருந்த, சம்பந்தப்பட்ட வாக்காளரின் வரிசை எண், சட்டசபை தொகுதி மற்றும் எண், பாகம் எண், அப்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களை பதிவு செய்யலாம். வாக்காளரின் விவரம் கிடைக்காவிடில் அதேபட்டியலில் உள்ள தாய் அல்லது தந்தை, தாத்தா அல்லது பாட்டி ஆகியோரின் விவரங்களை பதிவு செய்து, கையொப்பமிட்டு வழங்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி மற்றும் பொது இடங்களில் நேற்று முகாம் அமைத்திருந்தனர். கட்சி ஏஜென்ட்களும் உரிய ஏற்பாடு செய்திருந்தனர். நிலை அலுவலர்கள் வசம், 2002 பட்டியல் இருந்தது. அதை சரிபார்த்து, வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
விடுபட்ட இடங்களில், நிலை அலுவலரிடம் கேட்டு தெரிந்து, பிறகு பூர்த்தி செய்து ஒப்படைத்தனர். கட்சி ஏஜென்ட்கள், மொபைல் போன் மூலமாக, வாக்காளரின் பழைய பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்களை கண்டுபிடித்து கொடுத்தனர். வயதான வாக்காளர், எழுத படிக்க தெரியாத வாக்காளருக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களே எழுதி கொடுத்தனர்.
இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருப்பதால், விடுபட்ட வாக்காளர்கள், பூர்த்தி செய்த மற்றும் முழுவதும் பூர்த்தி செய்யாத படிவங்களை எடுத்துச்சென்று, முறையாக பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வசம் ஒப்படைக்கலாம் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

