/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம்; இருப்பு செய்வதில் சிக்கல்
/
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம்; இருப்பு செய்வதில் சிக்கல்
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம்; இருப்பு செய்வதில் சிக்கல்
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம்; இருப்பு செய்வதில் சிக்கல்
ADDED : ஆக 17, 2025 10:16 PM

உடுமலை; சின்னவெங்காய அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், மழை பெய்து வருவதால், இருப்பு வைத்து விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக மூன்று சீசன்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
வைகாசி பட்டத்தில், நடவு செய்யப்பட்ட சின்னவெங்காய சாகுபடியில் தற்போது அறுவடை துவங்கியுள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளதால், இந்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர்.
இருப்பினும், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. எனவே சில மாதங்கள் இருப்பு வைத்து, சின்னவெங்காயத்தை விற்பனை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். கடந்த சில நாட்களாக உடுமலை சுற்றுப்பகுதியில், பெய்து வரும் மழையால், அறுவடை பணிகள் பாதித்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: முதல் தர வெங்காயம் அதிகபட்சம், 43 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இரண்டாம் தர வெங்காயம் உள்ளூர் சந்தையில் மட்டுமே விற்பனையாகிறது. அவற்றை கிலோ, 30 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
பெரிய வெங்காயத்தின் விலை சரிவு சின்ன வெங்காய விலையையும் பாதித்துள்ளது.
சின்ன வெங்காயத்துக்கு, உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது. கட்டுபடியாகும் விலையை எதிர்பார்த்து, வரும் தீபாவளி பண்டிகை சீசன் வரை இருப்பு வைக்க தீர்மானித்து இருந்தோம்.
ஆனால், அறுவடை துவங்கியதும் மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடை செய்யும் வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி, பட்டறை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மழை தொடர்ந்தால், அறுவடை செய்யாத சின்ன வெங்காயம் விளை நிலங்களில் அழுகும் நிலை ஏற்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

