/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வேளாண் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் கூடாது'
/
'வேளாண் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் கூடாது'
ADDED : பிப் 21, 2025 12:15 AM

பல்லடம்,; கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
விலைவாசி அனைத்தும் உயர்ந்துள்ள இன்றைய காலகட்டத்திலும், குறைந்த விலைக்கு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்க முடிகிறது என்றால், அதற்கு இலவச மின்சாரமும் ஒரு காரணமாகும்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் கிடைக்கப்பெற்ற இலவச மின்சாரத்துக்கு கட்டணம் நிர்ணயிக்கும் நோக்கில், தமிழக அரசு 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த நினைக்கிறது.
நாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்து விட்டு அதன் பிறகு மீட்டர் மாட்டிக்கொள்ளட்டும்.
அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறும் அதிகாரிகள், விவசாயிகளைப் பற்றி சிந்தித்தார்களா? மகளிர் உரிமை தொகை கொடுப்பது மற்றும் இலவச பஸ் ஆகியவற்றால் ஏற்படாத நஷ்டம், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதில் தான் ஏற்படுகிறதா?
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நினைத்தால், மீட்டரை உடைத்தெறியும் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஏனெனில், 64 பேர் உயிர் தியாகம் செய்து கிடைத்ததே இலவச மின்சாரமாகும்.
இவ்வாறு போராடி பெற்ற மின்சாரத்துக்கு ஒரு ஆபத்து வருகிறது என்றால், எந்த ஒரு சூழலிலும் களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளோம்.
தமிழக அரசு, விவசாயிகளுடன் ஆலோசிக்காமல் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த திட்டமிட்டுள்ளதை கண்டிக்கிறோம்.

