/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்மைப்பு வலியுறுத்தல்
/
பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்மைப்பு வலியுறுத்தல்
பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்மைப்பு வலியுறுத்தல்
பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்மைப்பு வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2025 06:28 AM

பல்லடம்: சமூக ஆர்வலரை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவரை துாக்கிலிட வேண்டும் என, பல்லடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில், சமூக ஆர்வலர் பழனிசாமி என்பவரை கார் ஏற்றி கொன்றதாக, சாமாளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி (தி.மு.க.,) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விநாயக பழனிசாமி, மேலும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் லாலா கணேசன், ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்க தலைவர் வேலாயுதம், திருப்பூர் மாவட்ட நாடார் சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஜெகன், ஹிந்து பரிவார் கூட்டமைப்பின் தலைவர் சாய்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:
அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை சுட்டிக் காட்டும் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இவ்வாறு, சாமளாபுரம் பேரூராட்சியில் நடந்த விதிமீறலை சுட்டிக்காட்டி, கலெக்டருக்கு மனு அளித்த சமூக ஆர்வலர் பழனிசாமியை, பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி கார் ஏற்றி கொலை செய்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, குடிபோதையில் கார் ஓட்டியதுடன், காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டு, சமூக ஆர்வலர் மீது கார் ஏற்றி கொலை செய்த, பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமியின் பதவியை, சம்பவம் நடந்த அன்றே பறித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவ்வாறு செய்யவில்லை. எனவே, சமூக ஆர்வலரை கொடூரமாக கொலை செய்த விநாயகா பழனிசாமியை, பதவியிலிருந்து நீக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதவியில் நீடிக்கலாமா?
கொலை செய்யப்பட்டு இறந்த பழனிசாமியின் மகன் சுகுமார் கூறுகையில், ''எங்கள் தந்தை இறந்ததால் குடும்பமே சின்னாபின்னம் ஆகிவிட்டது. எனது தாயை எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. கொலை செய்த விநாயகா பழனிசாமி இன்னும் பேரூராட்சி தலைவராக நீடிக்கிறார் என்பது மேலும் அதிருப்தி அளிக்கிறது.
நாங்கள் அளித்த புகாரை வாபஸ் வாங்க சொல்லி பலரும் பேரம் பேசுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது,'' என்றார்.