/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யா தற்கொலை சமூக நலத்துறை விசாரிக்கும்
/
ரிதன்யா தற்கொலை சமூக நலத்துறை விசாரிக்கும்
ADDED : ஆக 04, 2025 10:33 PM
திருப்பூர்; திருப்பூரில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நிருபர்களிடம் கூறியதாவது:
மகளிர் ஆணையம் கடந்த, 3 ஆண்டுகளில், 40 ஆயிரம் கல்லூரி மாணவிகள், மகளிர் குழுக்களை சந்தித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தியுள்ளது.
எந்தெந்த மண்டலங்களில் அதிகளவு வழக்குகள் நிலுவையில் இருக்கிறதோ அல்லது புகார்கள் பெறப்பட்டுள்ளதோ அந்தந்த மண்டலங்களுக்கு நேரடியாக சென்று முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தீர்வுகளை தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொது விசாரணையின் சிறப்பு அம்சம், பாதிக்கப்பட்ட பெண்களும் அந்த வழக்கை விசாரிப்பவர்களும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு தீர்வுகள் காணப்படுவதுதான். பெறப்படும் புகார், 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மகளிர் ஆணையத்திற்கு வந்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. முன்பு இருந்ததை விட தற்போது பெண்கள் தைரியமாக வெளியே வந்து புகார் அளிக்கிறார்கள். நகர்ப்புற பெண்களை விட கிராமப்புற பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
பாலியல் அத்துமீறல் போன்ற காரணங்களுக்காக பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தவறானது. எதிர்த்து போராட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டம் சாதகமாக உள்ளது. வரதட்சணை கொடுமை தொடர்பாக ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் கூட உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களுக்காகவே, 181 என்ற உதவி எண் உள்ளது.
சமீபத்தில் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கு தொடர்பாக அவரது பெற்றோர் தமிழக முதல்வரிடம் புகார் மனுவை அளித்தனர். புகார் மனு கலெக்டருக்கு அனுப்பப்பட்டு, தற்போது சமூக நலத்துறை சார்பில், விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

