/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊக்குவிக்கப்படும் சோலார் மின்னாற்றல் பயன்பாடு; மின்கட்டண சுமை குறைய யோசனை
/
ஊக்குவிக்கப்படும் சோலார் மின்னாற்றல் பயன்பாடு; மின்கட்டண சுமை குறைய யோசனை
ஊக்குவிக்கப்படும் சோலார் மின்னாற்றல் பயன்பாடு; மின்கட்டண சுமை குறைய யோசனை
ஊக்குவிக்கப்படும் சோலார் மின்னாற்றல் பயன்பாடு; மின்கட்டண சுமை குறைய யோசனை
ADDED : ஜூலை 12, 2025 12:44 AM
திருப்பூர்; 'மின்கட்டண சுமையை குறைக்க, புதுப்பிக்கதக்க எரிசக்தி மின்னாற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின்சக்தியை பயன்படுத்த வேண்டும்' என, உலக எரிசக்தி சுதந்திர தினமான நேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நம் நாட்டில் வெப்ப ஆற்றல் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சார பயன்பாடு தான் அதிகம். இது, புவிமாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழ காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வெப்ப ஆற்றலை குறைத்து, சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்த, பொதுமக்கள், தொழில் துறையினர் பழகிக் கொள்ள வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 'விவசாய நிலங்களில், பகல் நேரங்களில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்க கூடிய, இயற்கை வளமான சூரியசக்தி மின்னாற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். இதன் வாயிலாக வெப்ப ஆற்றல் வாயிலாக மின் உற்பத்தி செய்வது குறையும்; இது, பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். விவசாயிகள் பகல் நேரங்களில், இயன்றளவு சோலார் மின்னாற்றல் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வீடுகளில் மின் சிக்கனம்!
பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து வீடுகளின் உரிமையாளர்களும் கூடுதல் ஆவணமின்றி, மின்கட்டண ரசீது மட்டும் பதிவேற்றம் செய்து, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். ஒரு கிலோவாட் திறன் கொண்ட சோலார் கட்டமைப்பு ஏற்படுத்த, 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், 2 கிலோ வாட் திறனுக்கு, 60 ஆயிரம் ரூபாய்; 3 கிலோ வாட் திறனுக்கு, 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்திற்கு, வங்கிக்கடன் உடனடியாக வழங்கப்படும். ஒரு கிலோ வாட் சோலார் பேனல் வாயிலாக, தினமும், 4 முதல், 5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும்.
இதன் வாயிலாக மின் கட்டணத்தில் பெரும் தொகை சேமிக்கும் சூழல் உருவாகும். உதாரணமாக இரு மாதத்துக்கு, 400 யூனிட் மின் பயன்பாட்டுக்கு, மின்கட்டணமாக, 1,125 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதுவே, சோலார் மின்னாற்றல் பயன்பாடு வாயிலாக, 206 ரூபாய் மட்டுமே செலவாகும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

