/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடைத்தது பாறைக்குழி; குப்பை பிரச்னைக்கு தீர்வு
/
கிடைத்தது பாறைக்குழி; குப்பை பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஆக 25, 2025 10:32 PM

திருப்பூர்; திருப்பூரில் சேகரமாகும் குப்பை கொட்ட பாறைக்குழி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், ஒரு மாதமாக நிலவிய குப்பை பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வு கிடைத்தது.
திருப்பூரில் தினமும் சராசரியாக 800 டன் குப்பை சேகரமாகிறது. குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் இல்லாததால், மாநகராட்சி நிர்வாகம் திணறி வந்தது. தற்போது இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது. முதலிபாளையம் பகுதியில் 30 ஏக்கர் பரப்பில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழி தற்போது குப்பை கொட்ட தேர்வு செய்யப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகள் முன்பே இப்பகுதி பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன. இடைப்பட்ட சில ஆண்டுகள் இங்கு குப்பை கொட்டப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் நில உரிமையாளரிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் அங்கு குப்பை கொட்டும் பணி துவங்கியது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
நேற்று அதிகாலை முதல் நகரில் தேங்கிக் கிடந்த குப்பைகள் வாகனங்கள் மூலம் அங்கு கொண்டு கொட்டப்பட்டன. காங்கயம் ரோடு, பாறைக்குழி செல்லும் வழி எங்கும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர்.
மாநகராட்சி சுகாதார பிரிவினர் மேற்பார்வையின் கீழ், கிருமி நாசினி மற்றும் துர்நாற்றம் வராத வகையில் திரவம் ஆகியன பயன்படுத்தியும், மூன்று லோடு குப்பையும் அதற்கேற்ப ஒரு லோடு மண் என்ற அளவில் பாறைக்குழியில் கொட்டப்படுகிறது. நேற்று நகரில் தேங்கிய பெருமளவு குப்பைகள் அகற்றப்பட்டன.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் முயற்சியால் நில உரிமையாளர்களுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேச்சு நடத்தி, இதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அமைச்சர் நேருவை தொடர்பு கொண்ட செல்வராஜ், இந்த விவரங்களை தெரிவித்தார். உரிய ஒத்துழைப்பு வழங்க அமைச்சர் உறுதியளித்தார். குப்பை வாகனங்கள் செல்ல வழியில்லாமல் சில இடங்களில் வழியில் குழி தோண்டப்பட்டிருந்தது. எம்.எல்.ஏ., வின் வேண்டுகோளை ஏற்று அந்த குழிகள் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளை அறிக்கை
வெளியிட தயார்
தற்போது குப்பை கொட்டப்படும் பாறைக்குழி ஏற்கனவே அறிவியல்ரீதியாக கையாளப்பட்டது. தற்போது, குப்பைகள் கொட்டப்படும் நிலையில், திடக்கழிவு மேலாண்மை குழு நாளை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு உரிய அறிவுரைகள் வழங்கவுள்ளது. மாநகராட்சியில் குப்பை தரம்பிரித்து வழங்குவது கட்டாயமாக்கப்படும். இது குறித்து நடவடிக்கை நாளை முதல் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துவங்கும். குப்பை அகற்றாத நிலையிலும் பொறுமை காத்த மாநகராட்சி மக்களுக்கு நன்றி.
திடக்கழிவு மேலாண்மையில் செலவினங்கள் குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். அனைத்து நடவடிக்கையிலும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் நிர்வாகம் இதிலும் முழுவதும் வெளிப்படையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த நடவடிக்கை மற்றும் செலவினங்கள் எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தில் பார்வையிடலாம். இதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடவும் நிர்வாகம் தயாராக உள்ளது.
- தினேஷ்குமார், மேயர்