
வேலுநாச்சியார் பிறந்த தினம்
வேலுநாச்சியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு வேலுநாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் ஷாபி முன்னிலையில், தொண்டர் அணி தலைவர் குத்புதின், விவசாய அணி தலைவர் கனகராஜ், மாணவர் அணி தலைவர் அமீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை அவிநாசி நகர தலைவர் ஆனந்தாஸ் மோகனசுந்தரம் ஒருங்கிணைத்தார்.
கட்டுமானப் பணி துவக்கம்
திருமுருகன்பூண்டி, 15 வார்டுகளை உள்ளடக்கிய பேரூராட்சியாக இருந்தது. கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, எல்லை விரிவாக்கம் செய்யப்படாமலேயே, 27 வார்டுகளாக மாற்றப்பட்டது. நகராட்சியாக அறிவிக்கப்பட்டு, மெகா திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது, 15 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கிறது; முதற்கட்டமாக, 7 கோடி ரூபாய்க்கான பணி டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. அவ்வகையில், பூண்டி நகராட்சி, 10 வார்டில் பணி துவங்கியிருக்கிறது. வார்டுகளில் சேகரமாகும் கழிவுநீரை கிணறு அமைத்து அதில் சேகரித்து, குழாய் வழியாக அந்நீரை வெளியேற்றி, குப்பைக் கொட்டும் இடத்தில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலாக சுத்திகரிப்பு செய்யும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியினர் சுணக்கம்
சில ஆண்டுகளாக, பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப்பணம் வழங்கும் பழக்கத்தை, ஆளும் கட்சிகள் அறிமுகம் செய்தன. பழனிசாமி, முதல்வராக இருந்த போது, பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கினார். இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்புடன், பணம் எதிர்பார்க்கும் மனநிலைக்கு மக்களும் மாறினர். நடப்பாண்டு, நிதி நெருக்கடி காரணமாக, பணம் தரும் அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. பரிசு தொகுப்பு வினியோகம், 9ம் தேதி துவங்கி, 13ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, டோக்கன் வழங்கும் பணி துவங்கியுள்ளது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் இல்லாததால், டோக்கன் பெற மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம், ஆளுங்கட்சியினரும் பொங்கல் பரிசுடன் ரொக்கம் இல்லாததால், சுணக்கம் காட்டுகின்றனர்.
வளர்ச்சி பணிக்கு பூமி பூஜை
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் இருந்து பொங்கலுார், என்.வி., நகர் வரை கான்கிரீட் ரோடு, மாவட்ட கவுன்சிலர் நிதி, 10.40 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் பி.ஏ.பி., பாசன சபை தலைவர் மகுடீஸ்வரன், வலுப்பூரம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் சிதம்பரம், முன்னாள் கவுன்சிலர் ஆனந்த கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராமம்பாளையம் ஏ.டி., காலனி காங்கிரீட் ரோடு, 8.24 லட்சத்திலும், கைகாட்டிப்புதுார் சாலை ர.36 லட்சத்திலும் அமைக்கவும் பூமி பூஜை நடந்தது.
ஹெ ல்மெட் விழிப்புணர்வு
திருப்பூர் மோட்டார் வாகன ஆலோசகர் சங்கம் மற்றும் அவிநாசி போக்குவரத்து போலீசார் இணைந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நடத்தினர். அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த இந்நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம் (சட்டம் ஒழுங்கு), முருகன் (போக்குவரத்து) ஆகியோர் தலைமை வகித்தனர். 'அவேர்னஸ் அப்பா' அறக்கட்டளை நிறுவனர் சிவசுப்ரமணி, மாநில துணைச் செயலாளர் குமார், மாநகர தலைவர் முருகேசன், செயலாளர் சோம்நாத், ஒருங்கிணைப்பாளர் கணேசன், அவிநாசி நகர தலைவர் கணேசன், முருகேசன், ஆனந்த் பங்கேற்றனர்.

