
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் வக்கீல் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி, நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், நேற்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள கோர்ட்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா கோர்ட்களிலும் இப் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பு நடந்தது. இருப்பினும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர். வழக்குகள் வேறு தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
5 மாதத்தில் 'பல்லிளித்த' கான்கிரீட்
பல்லடத்தை அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியில், 4.34 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. கட்டி முடிந்து ஐந்தே மாதங்கள் ஆன நிலையில், கான்கிரீட் தளத்தில் ஓட்டை விழுந்து, கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. தரமற்ற ஒப்பந்த பணிக்கு இது ஒரு முன் உதாரணமாக உள்ளது. இப்பகுதி பொதுமக்கள், ஓட்டையை அடைக்க கற்களை வைத்துள்ளனர். வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளதால், சேதமடைந்த கான்கிரீட் தளத்தை சீரமைக்க வேண்டும். தரமற்ற பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலவச மருத்துவ முகாம்
திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்தா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அன்பு இல்லத்தில் ஸ்ரீ பூர்ண சேவா ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவை நந்தா ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி முதல்வர் கிருத்திகா குத்து விளக்கு ஏற்றி வைத்தார். முன்னாள் மேகாலயா கவர்னர் சண்முகநாதன் முகாமை துவக்கி வைத்தார். விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் எக்சலான் ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். முகாமில், பூண்டி வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
பாதை பிரச்னைக்கு தீர்வு வேண்டும்
கணியாம்பூண்டி வீதி ஊர் மக்கள் சார்பில், கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், 'ராக்கியாபாளையம் முதல் உமையஞ்செட்டிபாளையம் செல்லும் வழியில், குட்டை பகுதிக்கு செல்லும் மண் சாலையுள்ளது. அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட மைதானமும் உள்ளது. மைதானத்திற்கு செல்லவும், இந்த வழியையே பயன்படுத்த வேண்டும். இந்த வழியை தான் இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இப்பகுதி சாலையின் வலப்புறம் உள்ள நில உரிமையாளர், சாலையை மறித்து, கற்கள் நட்டியுள்ளார். 10 ஆண்டுக்கு முன், இதுபோன்ற பிரச்னை எழுந்ததில், மக்கள் சாலை மறியல் செய்து, தடுப்பை அகற்ற செய்தனர். எனவே, அதிகாரிகள் கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்.
கரைப்புதுாரை இணைக்கணும்!
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் ''கரைப்புதுார், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், அதிகளவிலான வருவாய் இனங்களும் கொண்டதாக உள்ளது; முழுவதும் நகரமயமாகி வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, குப்பை அகறறுதல், கழிவு நீர் சுத்திகரித்தல் ஆகியன மேற்கொள்ள முடியாமல் உள்ளது. நீர்நிலை மற்றும் இட்டேரி பாதையில் கரைப்புதுார் ஊராட்சி குப்பைகளைக் கொட்டி தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும். இதுகுறித்து கோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அதிக மக்கள் தொகை மற்றும் வருவாய் உள்ள கரைப்புதுார் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் அல்லது மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்,'' என கூறியுள்ளார்.
கவிதை புத்தகம் வெளியீடு
திருப்பூர் படைப்பாளிகளின் எழுத்து அனுபவங்களின் தொடர் நிகழ்ச்சி, 24வது மாத நிகழ்வாக, திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையில் நடந்தது. எழுத்தாளர் அழகுபாண்டி அரசப்பன், துவக்கி வைத்தார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதிய திருப்பூரை மையமாக கொண்ட நாவல்கள் குறித்து பேசினார். கனவு பதிப்பகம் வெளியிட்டுள்ள அமரனின், 'மரணதேவி வணக்கம்' என்ற 'ைஹகூ' புத்தகத்தை கவிஞர் ஆழ்வை கண்ணன் வெளியிட, வக்கீல் சுப்புராஜ் பெற்றுக் கொண்டார். இளையோர் விருது, மாணவி பிரணிதாவுக்கு வழங்கப்பட்டது. இளம் எழுத்தாளர் மேகா பிரியதர்ஷினி, கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த பிரபு உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சியை, தங்க பூபதி ஒருங்கிணைத்தார்.

