
இலவச கண் சிகிச்சை முகாம்
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன், தி ஐ பவுண்டேஷன், அவிநாசி போக்குவரத்து போலீசார் இணைந்து வாகன ஓட்டுனருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த முகாமை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பேசினார். ரோட்டரி தலைவர் சதாசிவம், செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் மோகன்குமார், உதவி கவர்னர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். டூவிலர், கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், பொதுமக்கள்,போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். ஏற்பாட்டை ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், கவுஷிக், ஜெயப்பிரகாஷ், சதீஷ் ஆகியோர் செய்தனர்.
கட்டடத்தில் மரம் முளைத்து ஆபத்து
கொடுவாயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. புது கட்டடம் கட்டிய பின் பழைய கட்டடம் போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. அதில் ஆலமரம் முளைத்து நன்கு செழித்து வளர்ந்து வருகிறது. அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலைய புது கட்டடம் போன்றவை உள்ளன. கட்டடத்தில் மரம் வளர வளர கட்டடம் சிதைந்து இடிந்து விழும் நிலை உள்ளது. இதனால், அருகில் உள்ள மாணவர்களுக்கும், சுகாதார நிலைய ஊழியர்கள், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக பழைய கட்டடத்தை பராமரிக்க வேண்டும்; அதில் வளரும் மரங்களை அகற்ற வேண்டும். பராமரிக்க முடியாவிட்டால் கட்டடத்தையே அகற்ற வேண்டும்.
வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசி லிங்கம்பாளையம் பகுதி சரஸ்வதி வீடு முதல் சுரேஷ் வீடு வரை, 4 லட்சம் ர;பாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல், லிங்கம்பாளையம் தங்கம் கார்டன் குறுக்கு வீதிகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைத்தல் மற்றும் கமிட்டியார் காலனியில் நுாலகம் முதல் அன்பு வீடு வரை, 6 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது. இந்த வளர்ச்சிப்பணிகள், ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து மொத்தம், 20 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படுகிறது. பூமி பூஜையில், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) லெனின் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட கருவூல அலுவலர் முருகேசன், ஓய்வூதிய கணக்கு அலுவலர் அருள் உள்ளிட்ட அதிகாரிகள், ஓய்வூதியர் குறைகளை கேட்டறிந்தனர். ஓய்வூதியர்களிடமிருந்து ஏற்கனவே, 60 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், குறைகேட்பு கூட்டத்தில், புதிதாக, 20 மனுக்கள் பெறப்பட்டன. துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று, ஓய்வூதியர் சுட்டிக்காட்டிய குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.

