ரேஷன் கடை முழு நேரமாகணும்!
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பொதுமக்கள் கூறுகையில், '900 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள கடையில், தினமும், 30 பேருக்கு பொருள் வழங்கினால் மட்டுமே ஒரு மாதத்தில், அனைவரும் பயன் கிடைக்கும். ஆனால், பகுதி நேரமாக மட்டுமே செயல்படுவதால், கார்டுதாரர்கள் முழுமையாக பயன்பெற முடிவதில்லை. பொதுமக்கள் பலரும் பனியன் கம்பெனி மற்றும் கூலி வேலைக்கு செல்வதால், பொருள் வாங்க இயலாமல் போகின்றது. ரேஷன் பொருட்கள் முழுமையாக பெற்றால்தான், வீட்டு செலவுகள் குறையும். அப்போது தான் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்த முடியும். எனவே, 900 கார்டுதாரர்கள் உள்ள இந்த ரேஷன் கடையை முழு நேர ரேஷன் கடையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், நேற்று நடைபெற்றது. மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சித்துறை மூத்த ஆராய்ச்சி அலுவலர் ஆனந்த்பாபு தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, துணை இயக்குனர் பாமாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசாலட்சுமி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், கடந்த 2021 - 22 மற்றும் 2022 - 23 ம் ஆண்டுகளில், ஊத்துக்குளி - விருமாண்டம்பாளையம், தாராபுரம் - தளவாய்பட்டினம் கிராமத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மதிப்பீடு குழுவினரின் இந்த ஆய்வு, 24ம் தேதி வரை நடைபெறும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வேளாங்கண்ணிக்கு ரயில்
வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு ஸ்டேஷன்களில் நின்று, சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பனஸ்வாடி வழியாக பயணித்து, மூன்றாவது நாள் வாஸ்கோடகாமா செல்லும். பராமரிப்பு பணி காரணமாக, வேளாங்கண்ணி - ஈரோடு வரை இயக்கப்படும் இந்த ரயிலில், சேலம் வழியாக பயணிக்காமல் வழித்தடம் மாற்றப்பட்டு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ெஷாரனுார், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி வழியாக செல்லும். பராமரிப்பு பணியால் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதால், இனி கோவை, திருப்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு இந்த ரயிலில் ஏப்., 14ம் தேதி வரை (திங்கட்கிழமை தோறும்) பயணிக்க முடியும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்., 1ல் திறனாய்வு தேர்வு
கிராமப்புற மாணவர்களின் திறனை ஊக்குவித்து, கல்வி உதவித்தொகை வழங்கிட, ஊரகத் திறனாய்வு தேர்வு, 9ம் வகுப்பு மாணவருக்கு நடத்தப்படுகிறது. மாவட்டத்துக்கு தலா, 50 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு டிச., 14ம் தேதி அறிவித்தப்படி நடக்கவிருந்த நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் பிப்., 1ம் தேதி இத்தேர்வை தமிழகம் முழுதும் நடத்த தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில், 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை துவக்கியுள்ளது.
சாலை அமைக்க வேண்டுகோள்
பல்லடம், கரைப்புதுார் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'வீரபாண்டி முதல் அய்யம்பாளையம் வரையிலான ரோடு, 2 கி.மீ., துாரத்துக்கு, செடி, கொடி புதர்கள் மண்டியுள்ளது. ஆங்காங்கே பெரிய குழிகள் உருவாகியுள்ளன. பிரதான ரோடு பழுதடைந்துள்ளதால், அவரப்பாளையம், அய்யம்பாளையம், மீனம்பாறை ஆகிய மூன்று ஊர் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்பட்டுவருகின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்கள் நடக்கின்றன. பாம்பு உள்ளிட்ட விஷ சந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், மாணவ, மாணவியரும் பள்ளிக்கு சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். ரோட்டின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்றி, புதிய சாலை அமைக்க வேண்டும்,' என்றனர்.