
'டயாலிசிஸ்' மெஷின் வழங்கல்
திருப்பூர் லயன்ஸ் டயாலிசிஸ் டிரஸ்ட் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் குமார் நகரில் உள்ள ராம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வருகிறது. இங்கு காப்பீடு திட்டத்தில் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது. காப்பீடு இல்லாதவர்களுக்கு மிக குறைந்த கட்டணமாக 500 ரூபாய்க்கு 'டயாலிசிஸ்' செய்யப்படுகிறது. டயாலிசிஸ் சென்டரில் 10 மெஷின் உள்ளது. கூடுதலாக இரண்டு டயாலிசிஸ் மெஷின் புதிதாக நேற்று வழங்கப்பட்டது. லயன்ஸ் டயாலிசிஸ் டிரஸ்ட் சேர்மன் மெஜஸ்டிக் கந்தசாமி, வழங்கினார். நிர்வாகிகள் ஜீவானந்தம், ஐயப்பா பாலாஜி, டாக்டர் ராம்குமார் உட்ப பலர் பங்கேற்றனர்.
55 வி.ஏ.ஓ.,களுக்கு பணி மாறுதல்
திருப்பூர் வருவாய் கோட்டத்தில், ஐந்து தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலில் நேற்றுமுன்தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு சங்கத்தினரிடையே சர்ச்சை எழுந்ததால், கவுன்சில் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மாலை கவுன்சிலிங் நடைபெற்றது. பணியிட மாறுதல்கோரி வி.ஏ.ஓ.,க்கள் விணப்பம் பூர்த்தி செய்து வழங்கினர். ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார். கவுன்சிலிங்கில், நகர்புறங்களில் உள்ள 'ஏ' கிராமங்களில் 24 பேர்; கிராமப்புறங்களில் உள்ள 'பி' கிராமங்களில் 31 பேர் என, மொத்தம் 55 வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. 5 கிராமங்களில் வி.ஏ.ஓ., காலிப்பணியிடம் நீடிக்கிறது.
முடிவுற்ற திட்டப்பணி திறப்பு
காங்கயம் ஒன்றியம், மருதுறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஊரக வேலை உறுதி திட்டத்தில், 15.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் பொருள் இருப்பு கிடங்கு; ஆவாரங்காட்டு வலசு முதல் மருதுறை எல்.பி.பி., வாய்க்காலில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 45.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த திட்ட பணிகளை, அமைச்சர் சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக, வேளாண் துறை சார்பில், 5 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரகுநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
'ெஷட்டில்' தீப்பிடித்த கார்
காங்கயம் திருப்பூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்புசாமி, 33. இவரது கார், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கார் செட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று காலை, காரை எடுப்பதற்காக கருப்புசாமியும், அவரது மனைவியும் சென்றனர். காரில் சாவியை போட்டவுடன், கருகிய வாசம் வந்தது. உடனே காரை விட்டு கீழே இறங்கிய நிலையில், திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து சென்ற காங்கயம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கார் முழுவதும் எரிந்து போனது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளை, திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் நல சங்கம், ப்ரைம் ரோட்டரி சங்கம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பெருமாநல்லூரில் நடந்தது. பள்ளி மாணவ - மாணவியர், பொதுமக்கள், என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமை வகித்தார். ஐ.எம்.ஏ., திருப்பூர் கிளை தலைவர் பிரேமலதா, ப்ரைம் ரோட்டரி சங்க தலைவர் உஷா அகர்வால், வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் நல சங்க செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர்கள் போராட்டம்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, நுழைவாயில் முன் முழக்க போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தக்கு பேராசிரியர் காளிதாஸ் தலைமை வகித்தார். 'கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யு.ஜிசி., பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம், 57 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பேராசிரியர் ராஜ்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். பேராசிரியர் விஸ்வநாதன், நன்றி கூறினார். இதில், கல்லுாரி பேராசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.

