
தர்பூசணிப் பழம் வந்தாச்சு... (படம்)
கோடை காலத்தில், வெப்பத்தை தணிக்க, அனைத்து தரப்பினரும் தர்பூசணி சாப்பிடுவது வழக்கம். நீராதாரங்களை அதிகம் பருகினாலும், அக்னிநட்சத்திர நாட்களில், உடல் சூட்டை தணிக்க, தர்பூசணி மட்டுமே பயன்படுத்தப்படும். குளிர்பருவம் நடக்கும் நிலையில், தற்போதே தர்பூசணி விற்பனைக்கு வந்துவிட்டது. முன்கூட்டியே அறுவடை துவங்கியதால், நகரப்பகுதிகளில் தர்பூசணி விற்பனை கடைகளும் முளைத்துவிட்டன. வியாபாரிகள் கூறுகையில், 'திண்டிவனம், தாராபுரம் சுற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி, முன்கூட்டியே அறுவடைக்கு வந்தது. சிறிய அளவிலான காய்கள், நல்ல சிவப்பு நிறத்துடன் வந்துள்ளன. கிலோ, 20 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. ரோட்டோர வியாபாரிகள், புதிய தர்பூசணி கடை அமைக்க தயாராகி வருகின்றனர்,' என்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு -- 2 மற்றும் அவிநாசி போக்குவரத்து போலீசார் இணைந்து நேற்று புதிய பஸ் ஸ்டாண்ட் முன், கலை நிகழ்ச்சியுடன் கூடிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை நடத்தினர். என்.எஸ்.எஸ்.,ல ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் முருகன் துவக்கி வைத்தார். இதில் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், நான்கு சக்கரம் வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்டவும். மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. எஸ்.ஐ., லோகநாதன், மாணவ செயலர்கள் மது கார்த்திக்,கிருஷ்ணமூர்த்தி, செர்லின், தாமோதரன்,ஹேமந்த் ராகுல் ,லட்சுமி காந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி., வாய்க்கால் கட்டப்பட்டு, 50 ஆண்டுக்கு மேல் ஆகிறது. துவக்கத்தில் பாசனம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நிலமும் அதிகமாக இருந்தது. நாளடைவில் பாகப்பிரிவினைகள் மூலமும், நிலத்தை விற்பதன் மூலமும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து நிலங்களுக்கும் பாசனம் செய்ய வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஒரு சில இடங்களுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. நீண்ட நாட்களாக வாய்க்காலை மறு சீராய்வு செய்யவில்லை. இதனால், அனைத்து வாய்க்கால்களையும் ஆய்வு செய்து எங்கெங்கு தண்ணீர் செல்ல வில்லையோ அங்கெல்லாம் அதற்கு தேவையான நடவடிக்கையை பொதுப்பணித்துறையினர் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
'தரமில்லாத' தரைத்தளம் (படம்)
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, நான்கு தளங்களுடன் ஒருங்கிணைந்த வளாகமாக செயல்பட்டு வருகிறது. வளாகத்தின் மேற்கு புறத்தில் அவசர சிகிச்சை, தீக்காயத்தடுப்பு மற்றும் போலீஸ் விசாரணை அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள தரைத்தள கற்கள் சேதமடைந்து, மருத்துவமனைக்கு வருவோரின் கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. தற்காலிகமாக தடுப்பு வைத்து மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும், அவசரமாக வருவோர் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயிலுக்கு, 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ்கள் வந்து, நோயாளிகளை இறக்கி விட்டு செல்கின்றன. இந்த இடத்தில் இடையூறாக தடுப்பு வைப்பதை விடுத்து, பெயர்ந்து வரும் கற்கள் மற்றும் தரைத்தளத்தை சீரமைத்திட வேண்டும்.
ரோட்டில் சிதறிய 'ரத்தம்'
பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே, இது குறித்த விழிப்புணர்வு நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அதில், ஹெல்மெட் அணியாமல் வந்த சிலர் வாகனத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்று கலைஞர்கள் நடித்து காட்டினர். காய்கறிகள் பழங்கள் கீழே சிதறி கிடப்பது போன்றும், ரத்தத்துக்கு பதில் சிவப்பு பெயின்ட் ஊற்றப்பட்டும் நாடகம் அரங்கேறியது. விழிப்புணர்வு நாடகம் முடிந்ததும், நாடகக் கலைஞர்கள், போலீசார் கலைந்து சென்றனர். ஆனால், நாடகத்துக்காக பயன்படுத்தப்பட்ட காய்கறிகள், பூ மாலை மற்றும் பெயின்ட் ஆகியவை ரோட்டில் சிதறிக் கிடந்தன. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் விபத்து நடந்து, அதில் ரத்த வெள்ளம் ரோட்டில் கிடப்பதாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். நாடகம் முடிந்தவுடன், பயன்படுத்தி பொருட்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
நடைபயிற்சி அனுமதிக்கு மனு
அவிநாசியில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். முன்னதாக, அவர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவிநாசி பி.டி.ஓ., ஆபீசில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பணிகளைக் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. அவிநாசி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை குறித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அரசு மருத்துவமனையில், 24 மணி நேர விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட் பின், மறுசுழற்சி பூங்கா பணி துவக்க வேண்டும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு அனுமதி தர வேண்டும் உட்பட கோரிக்கை நல்லது நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டது.
காந்தி 78 வது நினைவுநாள்
திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணைமேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.
மாணவர் உறுதிமொழி ஏற்பு
காந்தி நினைவு நாளையொட்டிஅவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காந்தியின் வாழ்வியல் குறித்த கருத்தரங்கு மற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். காந்தியின் கொள்கைகள் பற்றி மாணவ மாணவியர் சிறப்புரையாற்றினர்.தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை சர்வதேச வணிகவியல் துறை சார்பில் பேராசிரியர்கள் மற்றும் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில், கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.