ADDED : பிப் 12, 2025 12:24 AM

தரமற்ற சாலை பணிகள்
பல்லடம் நகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள வீதி ஒன்றில், 10 லட்சம் ரூபாய் செலவில் ரோடு போடப்பட்டது. ஆறு மாதங்களே ஆன நிலையில், தரமற்ற பணியால் ஜல்லி கற்கள் வெளியே வந்து, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. வீடுகள் அதிகம் உள்ள பகுதி என்பதால், குழந்தைகள் வீதியில் விளையாடுவது வழக்கம். இதனால், குழந்தைகளுக்கும் ஆபத்து உள்ளது. எனவே, தரமின்றி போடப்பட்ட ரோடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பக்தருக்கு நீர்மோர் வழங்கல்
ஊத்துக்குளி, கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று அடிவாரத்தில் உள்ள கோவிலில், தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்றைய தேரோட்டத்தில் பங்கேற்றனர். ஊத்துக்குளி தாலுகா, இந்திய வாலிபர் சங்கம் சார்பில், நீர்மோர் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் குமார், வாலிபர் சங்க தாலுகா தலைவர் லெனின், செயலாளர் பாலமுரளி, பொருளாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்டோர், நீர்மோர் வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.
விடுமுறையிலும் வரி செலுத்த ஆர்வம்
திருப்பூர் மாநகராட்சியில், தற்போது நிதியாண்டு நிறைவடையுள்ள நிலையில் வரியினங்கள் வசூலிப்பதில் நிர்வாகம் மும்முரமாக உள்ளது. வரி வசூலைத் தீவிரப்படுத்த வார விடுமுறையான சனி, ஞாயிறு நாட்களிலும் வரி வசூல் மையங்கள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று அரசு விடுமுறையாக (தைப்பூசம்) என்ற நிலையிலும், வரி வசூல் மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட வரி செலுத்துவோர் பலரும் நேற்று இந்த மையங்களில் தங்கள் வரியினங்களைச் செலுத்தினர். வார விடுமுறை நாட்களிலும் கூட பலரும் வரி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
கேமராவில் சிக்காத நரிகள்
காங்கயம் தாலுகா, சேனாபதிபாளையம் கிராமம், சுந்தராடிவலசு பகுதியில் நரிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு வழங்கினர். விவசாயிகளின் பிரதான தொழிலாக செம்மறியாடு வளர்ப்பு உள்ள நிலையில், அதிகரித்துள்ள நரிகள், தினமும் செம்மறியாட்டு குட்டிகளை அடித்து, தின்பதால், அவற்றை வளர்ப்போரின் வாழ்வாதாரமே பாதிக்கிறது எனக் கூறியிருந்தனர். இதனால், நரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, சுந்தராடிவலசு பகுதியில் இரு கேமரா பொருத்தப்பட்டது. இருப்பினும், கேமராவில் நரிகளின் நடமாட்டம் தென்படவில்லை. அப்பகுதியினர் கூறுகையில், 'நரிகள் நடமாடும் பரப்பு பெரிதாக இருப்பதால், கூடுதலாக கேமரா வைக்க வேண்டும்,' என்றனர்.
கள் விடுதலை கருத்தரங்கம்
தமிழகத்தில் மது கொள்கையை மாற்றியமையக்கவும், கள் உற்பத்திக்கு அனுமதி பெறவும், கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறுகையில், ''கடந்த ஜன., மாதம் விக்கிரவாண்டியில் கள் விடுதலை மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வரும், 4ம் தேதி, திருப்பூம் மாவட்டம், கொங்கல் நகரில் கள் விடுதலை கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில், தமிழகத்தின் முக்கிய பிரபலங்கள், அண்ணாமலை, சீமான், வாசன், மணி, அர்ஜூன் சம்பத், பாரிவேந்தர், ஈஸ்வரன், தனியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
கள் விடுதலை கருத்தரங்கம்
தமிழகத்தில் மது கொள்கையை மாற்றியமையக்கவும், கள் உற்பத்திக்கு அனுமதி பெறவும், கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறுகையில், ''கடந்த ஜன., மாதம் விக்கிரவாண்டியில் கள் விடுதலை மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வரும், 4ம் தேதி, திருப்பூர் மாவட்டம், கொங்கல் நகரில் கள் விடுதலை கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில், தமிழகத்தின் முக்கிய பிரபலங்கள், அண்ணாமலை, சீமான், வாசன், மணி, அர்ஜூன் சம்பத், பாரிவேந்தர், ஈஸ்வரன், தனியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.