/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு'
/
'குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு'
ADDED : ஜன 27, 2025 12:25 AM

திருப்பூர்; ''திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தரம் பிரிப்பு மையம் மற்றும் பயோ காஸ் பிளான்ட் அமைக்கப்படும்'' என மேயர் தினேஷ்குமார் பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா நடந்தது. கமிஷனர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் தினேஷ்குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பல்வேறு திட்டங் களுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின், குமரன் நினைவிடத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேயர் பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்படவுள்ளது.
பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்; பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்துதல், குடிநீர் திட்டம் மேம்பாடு, நகர்ப்புற சுகாதார மையங்கள், புதிய ரோடுகள் அமைத்தல்; பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ரோடு சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதியை குப்பையில்லாத நகரமாக மாற்றும் வகையில் தினமும் 750 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.
இதில் புதிதாக இரண்டு இடங்களில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படும். மேலும், இங்கு சேகரமாகும் கழிவுகளை மறு சுழற்சி முறையில் பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்கப்படும். விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படும்.
இத்திட்டம் மூலம் மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை தொடர்பான பிரச்னை முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

