/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் இல்லாத கிராமத்தில் சிறப்பு முகாம்; மக்கள் வேதனை
/
பஸ் இல்லாத கிராமத்தில் சிறப்பு முகாம்; மக்கள் வேதனை
பஸ் இல்லாத கிராமத்தில் சிறப்பு முகாம்; மக்கள் வேதனை
பஸ் இல்லாத கிராமத்தில் சிறப்பு முகாம்; மக்கள் வேதனை
ADDED : ஜூலை 30, 2025 07:58 PM
உடுமலை; உடுமலை அருகே, பஸ் வசதி இல்லாத கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால், மனு கொடுக்க, பிற கிராமங்களில் இருந்து வந்த பயனாளிகள் வேதனைக்குள்ளானார்கள்.
தமிழக அரசு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற, 'உங்களுடன் ஸ்டாலின்,' என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், முகாம் நடத்தும் இடத்தேர்வு மற்றும் ஏற்பாடுகளில் அதிகாரிகள் சொதப்புவதால், மக்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
நேற்றுமுன்தினம் குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளி கிராமத்தில், சிறப்பு முகாம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்முகாமில், கொங்கல்நகரம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் பல்வேறு அரசுத்துறைகள் சார்ந்த மனுக்களை வழங்கலாம் என தெரிவித்திருந்தனர்.
நடையாய் நடந்து... முகாம் நடந்த அடிவள்ளி கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை. பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பிரிவில் இறங்கி, 2 கி.மீ., துாரம் நடக்க வேண்டும்.
இக்கிராமத்தில் முகாம் நடந்ததால், கொங்கல்நகரம், புதுார், புதுப்பாளையம், லிங்கம்மாவூர், ராவணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் மற்றும் முதியவர்கள் முகாமிற்கு வர சிரமப்பட்டனர்.
இந்த முகாமில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தால், தொகை கிடைக்கும் என தெரிவிப்பதால், பெரும்பாலும் பெண்களே முகாமில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்; அவர்கள் நேற்று 2 கி.மீ., துாரம் நடந்து சென்று மனு கொடுத்து விட்டு, மீண்டும் நடைப்பயணமாக தங்கள் கிராமத்துக்கு திரும்பினர்.
முகாம் நடத்த இடம் தேர்வு செய்த அதிகாரிகளின் அலட்சியத்தால், மக்கள் வேதனைக்குள்ளானார்கள்.

