/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்பு; முதன்மை கல்வி அலுவலர் தகவல்
/
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்பு; முதன்மை கல்வி அலுவலர் தகவல்
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்பு; முதன்மை கல்வி அலுவலர் தகவல்
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்பு; முதன்மை கல்வி அலுவலர் தகவல்
ADDED : நவ 26, 2025 05:48 AM
திருப்பூர்: 'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்; மாணவ, மாணவியர் இந்த வகுப்புகளில் தவறாமல் பங்கேற்பதன் மூலம் கூடுதல் மதிப்பெண்களை எளிதில் பெற முடியும்,' என, முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறினார்.
நடப்பு, 2025 - 2026ம் கல்வியாண்டு துவங்கி, ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு செய்முறை தேர்வுக்கு இரண்டு மாதமும், பொதுத்தேர்வுக்கு மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
பண்டிகை, விடுமுறை தினங்கள் போக, பள்ளி, 60 நாட்கள் மட்டுமே முழுமையாக செயல்படும்; இத்தகைய நாட்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, 2026 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்த முடியும். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் மாவட்ட கல்வித்துறை இறங்கியுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் மெல்ல கற்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு, வார நாட்களில் காலை, மாலை ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் நன்றாக படிக்க கூடிய மாணவ, மாணவியருக்கு திரும்ப, திரும்ப பயிற்சி அளித்து, பாடங்களை தொடர்ந்து எழுத செய்து, அவர்களை அதிக மதிப்பெண் பெற தயார்படுத்தவும் ஆயத்தமாகி வருகிறது.
இதற்காக, ஒவ்வொரு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் 'அனுபவ' ஆசிரியர்கள் அடங்கிய குழு தலைமை ஆசிரியர் தலைமையில் உருவாக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு அவசியம்
முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறுகையில், ''பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது ஒவ்வொரு ஆண்டும் உள்ள நடைமுறை தான்; மாணவ, மாணவியர் சிறப்பு வகுப்புகளில் தவறாமல் பங்கேற்பதன் மூலம் கூடுதல் மதிப்பெண்களை எளிதில் பெற முடியும்.
தேர்வுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், பெற்றோர்கள் சிறப்பு வகுப்புக்கு தங்கள் குழந்தைகளை கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும்,'' என்றார்.

