/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய ஆலை துவங்க சிறப்பு கடன் தேவை: ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
/
புதிய ஆலை துவங்க சிறப்பு கடன் தேவை: ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
புதிய ஆலை துவங்க சிறப்பு கடன் தேவை: ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
புதிய ஆலை துவங்க சிறப்பு கடன் தேவை: ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 30, 2025 12:54 AM

திருப்பூர்: 'பி.எம்., மித்ரா பார்க்' திட்டத்தில், புதிய தொழிற்சாலை யூனிட் அமைக்க, தொழில்துறையினருக்கு வங்கிகள் சிறப்பு கடன் வழங்க முன்வர வேண்டும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு வழங்கப்படும், கடன் வழங்கும் முறையை மதிப்பாய்வு செய்வதற்காக, மத்திய ரிசர்வ் வங்கி சார்பில், ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதன்படி, 30வது ஆலோசனை கூட்டம், மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுவாமிநாதன் தலைமையில், கோவையில் நடந்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் தாஸ், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அரசு மற்றும் தனியார் வங்கிகளின் முதன்மை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் குமார் துரைசாமி பங்கேற்றனர். திருப்பூர் கடந்த நிதியாண்டில்,44,747 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி செய்தது. ஏற்றுமதியாளர்களில், 95 சதவீதம் பேர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர். நாட்டின் மொத்த பின்னலாடை உற்பத்தியில், திருப்பூரின் பங்களிப்பு, 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க வரி உயர்வால் திருப்பூர் ஏற்றுமதி துறை பாதிக்கப்பட்டுள்ளது. கடன்களை திருப்பி செலுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம்; வட்டி மானிய திட்டம், கடன் விண்ணப்பங்களுக்கு வங்கிகள்விரைந்து நடவடிக்கை எடுப்பது; மத்திய ரிசர்வ் வங்கி தளத்தை எளிமைப்படுத்துதல்; சுங்கத்துறை இடையிலான ஒருங்கிணைப்பு சிக்கல்களை தீர்த்தல் போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக, 'ரெப்போ' வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும். அதன் நன்மைகள் வங்கிகளின் வழியாக தொழில்முனைவோருக்கு உடனடியாக சென்றடைவதில்லை. வங்கிகள், ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கடன் உத்தரவாத திட்டங்களை வங்கிகள் முறையாக செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். இந்திய ஜவுளித்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக, 'பி.எம்., மித்ரா பார்க்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய தொழிற்சாலை யூனிட் அமைக்க, தொழில்துறையினருக்கு வங்கிகள் சிறப்பு கடன் வழங்க முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
---
கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், மத்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சுவாமிநாதனிடம் கோரிக்கை கடிதம் வழங்கினார். அருகில்,(இடம் இருந்து) இணை செயலாளர் குமார்துரைசாமி, பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஏ.இ.பி.சி., நிர்வாகி சுந்தர்

