/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களுக்கான சிறப்பு திட்டங்கள்; கிராமசபையில் விழிப்புணர்வு
/
மக்களுக்கான சிறப்பு திட்டங்கள்; கிராமசபையில் விழிப்புணர்வு
மக்களுக்கான சிறப்பு திட்டங்கள்; கிராமசபையில் விழிப்புணர்வு
மக்களுக்கான சிறப்பு திட்டங்கள்; கிராமசபையில் விழிப்புணர்வு
ADDED : ஆக 17, 2025 09:47 PM
உடுமலை; மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் குறித்து, கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட 72 ஊராட்சிகளில், சுதந்திர தினத்தையொட்டி, நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினங்கள் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து கூடுதல் கூட்ட பொருட்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசின், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் மேற்கொள்ளும் பிரதம மந்திரியின் சூரிய ஒளி வாயிலாக வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டம், வேளாண்மைக்கு சூரிய ஒளி வாயிலாக நீர்பாசனம் செய்யும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பதிவு பணிகளை மாநில புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு முகவர்கள், மாநில தொடர்பு அலுவலர்கள் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
கிராமப்புறங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்ய மேய்ச்சல் மற்றும் தங்குமிடங்களை அடையாளம் காண வேண்டும்.
தடுப்பூசி செலுத்துதல், அடையாள குறியிடுதல் மற்றும் ஊராட்சி கால்நடை பராமரிப்பு கொட்டகை அமைத்திட கால்நடைத்துறையுடன் ஒருங்கிணைத்தல், மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளை கிராம ஊராட்சி மேம்பாட்டு திட்டங்களில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஒளிவு மறைவற்ற, பொறுப்புணர்வு மற்றும் கிராம ஊராட்சி மேம்பாட்டிற்கான மக்கள் பங்கேற்பு திட்டமிடல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கிராம ஊராட்சியின் செயல்திறன் முடிவுகளை சமூகத்துடன் பகிர்வு செய்தல் வேண்டும்.
தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி) திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக, தகுதி பெற்ற இளைஞர்களுக்கு (18 முதல் 35 வயதுடையவர்கள்) வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் தொடர்பாக தகவல் தெரிவித்தல் மற்றும் தகுதியுடையவர்களிடம் விண்ணப்பம் கோருதல் வேண்டும்.
மத்திய அரசின் விபத்து காப்பீடு திட்டம் மற்றும் புதுப்பித்தல் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், ஊராட்சிகளில் கூடுதல் பொருட்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.