/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்பின் மாஸ்டர்: சுழற்றியடித்த மழை
/
ஸ்பின் மாஸ்டர்: சுழற்றியடித்த மழை
ADDED : அக் 22, 2024 12:11 AM

43.85 மி.மீ., மழை பதிவு
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், பரவலாக பெய்த கனமழை, 43.85 மி.மீ., ஆக பதிவாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை நேரம், திருப்பூர் நகரம் உள்பட மாவட்டம் முழுவதும் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது.
நடப்பு வடகிழக்கு பருவத்தில், இதுவரை இல்லாத அளவில், நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 43.85 மி.மீ., மழை பெய்துள்ளது.
உடுமலை தாலுகா அலுவலக சுற்றுப்பகுதிகளில், 118 மி.மீ.,க்கு மிக கனமழையும்; திருமூர்த்தி அணை பகுதியில் 105 மி.மீ., - திருமூர்த்தி அணை (ஐ.பி.,) 100 மி.மீ., - திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதிகளில் 92 மி.மீ., - கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 84; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 72 மி.மீ.,க்கு கன மழை பதிவாகியுள்ளது.
உடுமலை அமராவதி அணையில் 54 மி.மீ., - ஊத்துக்குளியில் 42; மூலனுாரில் 42; குண்டடத்தில் 33; காங்கயத்தில் 22; வட்டமலைக்கரை ஓடையில் 20.40; மடத்துக்குளத்தில் 20; பல்லடத்தில் 16 மி.மீ.,க்கு மிதமான மழை பெய்துள்ளது.
அவிநாசியில் 15; தாராபுரத்தில் 11; திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் 9; உப்பாறு அணையில் 8; நல்லதங்காள் ஓடையில் 7; வெள்ளகோவிலில் 6.60 மி.மீ.,க்கு லேசான மழை பெய்துள்ளது. 'ஸ்பின் மாஸ்டர்' போல் சுழற்றியடித்தது மழை.
வீடுகளில் நீர்; சோளம் நாசம்
திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள மூளிக் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. நேற்றுமுன்தினம் கன மழை பெய்த நிலையில், தண்ணீர் செல்ல வழியில்லாமல், அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. தீயணைப்பு துறையினர் ஆகாயதாமரையை அகற்றி, வாய்க்காலை சரி செய்தனர்.
குளத்தின் தென்பகுதியில், ஏழு ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிடப்பட்டிருந்தது. கனமழை பெய்ததால், சோளப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அங்கேரிபாளையம், கவிதா நகரில், கனமழை பெய்ததால், தாழ்வான பகுதியில் உள்ள 30 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
மழைக்கு இடிந்த வீடு
திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவபட்டி ஏ.டி., காலனியை சேர்ந்தவர் முத்துசாமி; இவரது மனைவி ராமாத்தாள், 70, நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்த கனமழையில், வீட்டின் ஒரு பகுதி மண் சுவர் இடிந்து விழுந்தது.
வடக்கு தாசில்தார், மகேஸ்வரன், வீட்டை பார்வையிட்டு ராமாத்தாளுக்கு நிவாரண தொகையாக எட்டு ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
வார்டு கவுன்சிலர் தங்கராஜ், அரிசி, பருப்பு, ஆயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கினார்.
வீட்டில் புகுந்த மழைநீர்
திருப்பூரில் மாநகராட்சி 15வது வார்டு அங்கேரி பாளையம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர் மற்றும் கவிதா நகர் ஆகிய வீதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பொது மக்கள் நேற்று காலை அங்கேரி பாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அனுப்பர்பாளையம் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, சாலை மறியலை கைவிட செய்தனர். அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வீட்டுக்குள் மழை நீர் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர்.
அங்கன்வாடியில் அவதி
திருப்பூர் ஒன்றியம், பொங்கு பாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் அங்கன்வாடி மையத்தில் 40 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் மழைநீர் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்தது. அங்கன்வாடி மையம் முழுவதும் சேறும் சக்தியானது. நேற்று காலை அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்த 25 குழந்தைகள் உள்ளே அமர முடியாத நிலை ஏற்பட்டதால், பெற்றோர்கள் திரும்பி வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
15 குழந்தைகள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமர வைக்கப்பட்டனர். ஊராட்சி சார்பில், அங்கன்வாடி மையம் சுத்தம் செய்யப்பட்டது.
பெற்றோர்கள் கூறுகையில், ''அங்கன்வாடி மையம் பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் மழை நீர் புகுந்து குழந்தைகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்'' என்றனர்.
செவ்வந்திப் பூக்கள் வீண்
மழையில் நனைந்த நிலையில் நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு வந்த செவ்வந்தி பூக்களுக்கு, விலை கிடைக்கவில்லை. வழக்கமான நாட்களில், 250 கிராம், 60 ரூபாய், கிலோ, 200 ரூபாய்க்கு விற்கும் பூக்கள் நேற்று, 250 கிராம், 20 ரூபாய், கிலோ, 80 ரூபாய்க்கு விற்றது. கிலோ, 100 ரூபாய்க்கும் கீழ் சென்றாலும், சீசன் இல்லாததால், பூக்களை வாங்கிச் செல்ல ஆளில்லை என்றனர், பூ வியாபாரிகள். பூ மார்க்கெட்டுக்கு வெளியே குப்பையில் செவ்வந்தி பூக்கள் கொட்டியிருந்ததை காண முடிந்தது.