ADDED : பிப் 06, 2025 02:16 AM
திருப்பூர்: திருப்பூர், கோட்டைக்காடு ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
தாராபுரம் ரோடு கோட்டைக்காடு ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா, கடந்த 26ல் கிராம சாந்தியுடன் துவங்கியது; 28 ம் தேதி பூச்சாட்டு நடந்தது. கடந்த, 2 ம் தேதி கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து, அம்மனுக்கு அபிேஷக, அலங்காரபூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம், நொய்யல் கரையில் இருந்து வாண வேடிக்கையுடன் கும்பம் எடுத்துவரப்பட்டது. இரவு, 11:00 மணிக்கு, முத்தாளம்மன் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலை, மாவிளக்கு ஊர்வலமும், மதியம் உச்சி பூஜையும் நடந்தது.
அம்மனுக்கு, தங்க கிரீடத்துடன் கோட்டை மாரியம்மன் அலங்கார பூஜை நடந்தது. நேற்று மாலை, குலாலர் பிள்ளையார் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வந்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
இன்று காலை அபிேஷக பூஜையும், மஞ்சள் நீர் ஊர்வலம் மற்றும் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது; நாளை புஷ்ப அலங்கார பூஜையும், அன்னதானமும் நடக்க உள்ளது.