நாற்றுப்பண்ணைகளில் காய்கறி நாற்றுக்கள் தேக்கம்!பருவ மழைகள் பொய்த்ததால் சாகுபடி பாதிப்பு
நாற்றுப்பண்ணைகளில் காய்கறி நாற்றுக்கள் தேக்கம்!பருவ மழைகள் பொய்த்ததால் சாகுபடி பாதிப்பு
UPDATED : ஜூலை 13, 2026 05:23 PM
ADDED : ஜூலை 13, 2026 05:21 PM

உடுமலை: பருவ மழை ஏமாற்றியதால், காய்கறி சாகுபடியை துவக்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், உடுமலை பகுதிகளில் உள்ள நாற்றுப்பண்ணைகளில், நாற்றுக்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, மிளகாய், காலிப்பிளவர், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதிகளில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், விவசாயிகளுக்கு உதவும் வகையில், நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு, 20 முதல் 30 நாட்கள் வரை வளர்ந்த நாற்றுக்களாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி மற்றும் அருகாமையிலுள்ள மற்ற பகுதிகளில், 60க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் அமைந்துள்ளது. ஒவ்வொன்றும், தலா, லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும்.
இப்பண்ணைகளில், தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்ளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இப்பண்ணைகளிலிருந்து தக்காளி நாற்று, 22 நாட்களிலும், மற்ற காய்கறி நாற்றுக்கள், 30 நாட்களிலும் விவசாயிகள் வாங்கி நடவுசெய்கின்றனர்.
வழக்கமாக, மே இறுதியில் துவங்கும் தென்மேற்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, ஜூன் - ஜூலை மாதங்களில் காய்கறி சாகுபடி சீசன் காலமாக உள்ளது.
நடப்பாண்டு, கோடை மழை பொய்த்த நிலையில், தென்மேற்கு பருவ மழையும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால், சாகுபடி பணியை துவக்க முடியாமல் விவசாயிகள் உள்ளனர்.
கிணறு, போர்வெல் ஆதாரமாகக்கொண்ட இறவை பாசனத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளும், சீதோஷ்ண நிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, சாகுபடி மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, வெயிலுக்கு தாங்காமல் செடிகள் காய்வது, காய்கள் பாதிப்பது, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினாலும், தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாலும், காய்கறி சாகுபடி மேற்கொள்ளவில்லை.
இதனால், காய்கறி நடவு சீசனை எதிர்பார்த்து, நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட, காய்கறி நாற்றுக்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும், தலா, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் நாற்றுக்கள் வரை தேக்கமடைந்துள்ளது.
இந்த நாற்றுக்களை, 25 முதல் 30 நாட்களில், வயல்களில் நடவு செய்யாவிட்டால், முழுமையாக வீணாகும் நிலையும், பல லட்சம் ரூபாய் நிதி இழப்பும் ஏற்படும் சூழல் உள்ளது.
வீணாகும் நாற்றுகள் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், 'பருவ மழைகள் ஏமாற்றியதால் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதோடு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, விலை சரிவு, சீதோஷ்ண நிலை மாற்றத்தில், காய்கறி செடிகளை காப்பாற்றுவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் காய்கறி சாகுபடி மேற்கொள்ள முன்வரவில்லை. இதனால், தற்போது நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்த நாற்றுக்கள் தேக்கமடைந்து, வீணாகியுள்ளது,' என்றனர்.
