/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் செலவு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் செலவு
ADDED : ஜூலை 20, 2025 01:39 AM
பல்லடம் : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஊராட்சி நிர்வாகங்கள் திண்டாடி வருகின்றன.
அரசு சார்ந்த சேவைகள், திட்டங்களை பொதுமக்கள் எளிதில் பெற்று பயனடையவும், புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டது.
நகரப் பகுதிகளில், 13 துறைகள், 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில், 15 துறைகள், 46 சேவைகள் என, பொதுமக்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும், 10 ஆயிரம் முகாம்கள் என, வரும் நவ., மாதம் வரை இத்திட்ட முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் திட்ட முகாம்களுக்கான செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்படாததால், ஊராட்சி நிர்வாகங்கள் திண்டாடி வருகின்றன.
நகராட்சி, ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட, 15 துறைகள் பங்கேற்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது. இதற்காக, மண்டப வாடகை, மின் கட்டணம், டேபிள் சேர், கம்ப்யூட்டர், இணைய வசதி, குடிநீர், உணவு, தேனீர், துப்புரவு பணி, வண்டி வாடகை, ஜெனரேட்டர் என, எண்ணற்ற செலவுகள் உள்ளன. இதன்படி, சாதாரணமாக, ஒரு முகாமுக்கு, 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.
கடந்த காலங்களில், இது போன்ற முகாம்களுக்கு ஆகும் செலவு களை, மக்கள் பிரதிநிதிகளே கவனித்துக் கொண்டிருந்தனர்.
தற்போது, ஊராட்சித் தலைவர்களும் இல்லாமல், வருவாய் குறைந்த கிராம பகுதிகளில் எவ்வாறு இந்த செலவுகளை சமாளிப்பது என்பதே தெரியவில்லை என, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.
முகாம் நடத்துவதற்கு முன்பே, இதற்கான நிதியை ஒதுக்கினால்தான், முகாம் தங்குதடையின்றி நடத்த முடியும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.