/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று துவக்கம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 14, 2025 11:47 PM
திருப்பூர்; தமிழகம் முழுவதும், அனைத்து நகர மற்றும் கிராம பகுதிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், இன்று முதல் துவங்குகிறது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், முகாமை துவக்கி வைக்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தில், ஊரக மற்றும் நகர பகுதிகளில், நான்கு கட்டமாக, மொத்தம் 325 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இன்று முதல் வரும் ஆக., 14 வரை, 120 முகாம்களும்; ஆக., 15 முதல் செப்., 14ம் தேதி வரை, 96 முகாம்கள்; செப்., 15 முதல் அக்., 14ம் தேதி வரை, 96 முகாம்கள்; அக்., 15 முதல் நவ., 14 வரை, 13 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
முதல் நாளான இன்று, திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டலத்துக்கு உட்பட்ட 1,9,10 வார்டு பகுதிகளுக்கான முகாம், வெங்க மேடு, ஜெகா கார்டனில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தாராபுரம் நகராட்சியில், 6, 12, 13 வார்டுகளுக்கு, வாசவி திருமண மண்டபத்திலும்; கன்னிவாடி பேரூராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி; அவிநாசி ஒன்றியத்தில், கணியாம்பூண்டியிலுள்ள எஸ்.கே.எம்., திருமண மண்டபம்; மூலனுாரில், எஸ்.ஜெ.எம்., மஹால்; ஊத்துக்குளியில், தேவனம்பாளையம் நாச்சியம்மன் செங்குந்தர் திருமண மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறுகிறது.
காலை, 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில், இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, கட்டட அனுமதி, புதுமைப்பெண் திட்ட பதிவு, பட்டா மாறுதல், வாரிசு சான்று, இருப்பிட சான்று, வேளாண் துறை சார்ந்த பதிவுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கோரும் பதிவு உள்பட பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டு, தீர்வு காணப்படுகிறது.
மொத்தம், 15 அரசு துறைகள் வழங்கும் 46 சேவைகள், இம்முகாம் மூலம், மக்களுக்கு வழங்கப்படும். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களும் இம்முகாமில் பெறப்பட உள்ளது. முகாமுக்கு செல்லும்போது, உரிய ஆவணங்களை கட்டாயம் எடுத்துச்செல்லவேண்டும். மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, ரேஷன் கார்டு, ஆதார், பேங்க் பாஸ்புக் கொண்டு செல்ல வேண்டும்.