ADDED : பிப் 13, 2024 01:12 AM

திருப்பூர்;இலவச பட்டாவுக்கான இடம் எங்கு உள்ளது என அளவீடு செய்து வழங்க கோரி, காங்கயம் தாலுகா நிழலி பொதுமக்கள், குறைகேட்பு கூட்டத்தில் நேற்று மனு அளித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமை வகித்தார். துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இடம் எங்கே?
காங்கயம் தாலுகா நிழலியை சேர்ந்த பொதுமக்கள், பட்டாவுக்கான இடத்தை கண்ணில் காட்டக்கோரி மனு அளித்தனர். பொதுமக்கள் கூறியதாவது:
காங்கயம் தாலுகா நிழலியில், கடந்த 2007ல் வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை, ரத்து செய்துவிட்டனர். மீண்டும், கடந்த 2023, டிசம்பர் மாதம், 50க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும், பட்டாவுக்கான இடம் எங்கே உள்ளது என, இன்னும் எங்கள் கண்ணில் காட்டவில்லை. பட்டாவுக்கான இடத்தை, அளவீடு செய்து வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வழித்தடம் மாயம்
இடுவாய் ஊராட்சி மக்கள் அளித்த மனு: இடுவாய் ஊராட்சி ஆண்டி புல்லங்காடு பகுதியில், 150 குடும்பங்கள் வசித்துவருகிறோம். இடுவம்பாளையம் - சீராணம்பாளையம் ரோட்டில், ஆண்டி புல்லாங்காடு செல்வதற்கு 20 அடி அகல பொது வழித்தடம் உள்ளது. இடுவாய் ஊராட்சி சார்பில், கான்கிரீட் ரோடும் போடப்பட்டுள்ளது. பொதுவழித்தடத்தை ஆக்கிரமித்து, தனியார் தற்போது கட்டடம் கட்டிவருகிறார். வி.ஏ.ஓ.,விடம் புகார் அளித்தோம்; அவரோ, பொது வழித்தடத்தில் பெரும்பகுதி தனியாருக்கு சொந்தமானதுதான் என்கிறார். திருப்பூர் தெற்கு தாசில்தாரிடம் அளித்த புகாரின்பேரில், வருவாய் ஆய்வாளர், பொது வழித்தடத்தை ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். பொது வழித்தடத்தை மீட்டுத்தரவேண்டும்.
விலக்கு வேண்டும்
பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு: ஹிந்து சமய அறநிலைய கோவில் உட்பட அனைத்து கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு, மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு, ஓய்வூதியம் வழங்கவேண்டும். பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு, ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்கவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இச்சான்று வழங்கமுடியாததால், நலவாரிய பதிவு செய்ய, வருவாய் சான்று கேட்பதிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கவேண்டும்.
ஏ.ஜி., சபை விவகாரம்
இருதரப்பினருக்கு இடையிலான பிரச்னை காரணமாக, திருப்பூர் பங்களா ஸ்டாப், ஏ.ஜி., சபை பூட்டப்பட்டுள்ளது. ஒரு தரப்பினருடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண்பது சாத்தியமில்லாததால், இருதரப்பினரையும் அழைத்து, நியாயமான முறையில் விசாரணை நடத்தவேண்டும் என, சபை உறுப்பினர்கள் ஒருதரப்பினர் மனு அளித்தனர்.
முகாமில், மொத்தம் 414 மனுக்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன.