/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை மிரட்டும் தெருநாய்கள்; நகரில் குறையாத பிரச்னை
/
மக்களை மிரட்டும் தெருநாய்கள்; நகரில் குறையாத பிரச்னை
மக்களை மிரட்டும் தெருநாய்கள்; நகரில் குறையாத பிரச்னை
மக்களை மிரட்டும் தெருநாய்கள்; நகரில் குறையாத பிரச்னை
ADDED : மே 30, 2025 11:47 PM
உடுமலை : முக்கிய ரோடுகளில் வலம் வந்து, மக்களை விரட்டும் தெருநாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகரப்பகுதியில், மாலை நேரத்தில், நகர்வலத்தை துவக்கும் நாய்கள், எப்படி பாயும் என தெரியாமல், முக்கிய ரோடுகளில் மக்கள் பதுங்கி, பதுங்கி நடப்பது தொடர்கதையாக மாறி விட்டது.
இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில் முகாமிட்டு, இரை தேடும் வழக்கத்தால், கழிவுகள் இல்லாத போது, மக்கள் மீது பாயும் நாய்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.
நகரில் தெருநாய்களை கட்டுப்படுத்த, நாய்களை பிடித்து கருத்தடை செய்ய, நாய் வாகனம் நகராட்சியால் வாங்கப்பட்டது. இந்த வாகனம் பயன்பாடு இல்லாமல் நகராட்சி அலுவலகத்தில், காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது.
முன்பு, விலங்குகள் நலவாரியத்தால், அங்கீகரிக்கப்பட்ட அமைப்பினர் வாயிலாக, கருத்தடை செய்யும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இவ்வாறு, அங்கீகரிக்கப்பட்ட குழுவினருக்கு நகராட்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்தது.
இக்குழுவினர், நாய் பிடிக்கும் வாகனத்தின் வாயிலாக, ஒவ்வொரு பகுதியாக, தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
அதன்பின்னர், நாய்களை பிடிப்பதற்காக வாங்கப்பட்ட வாகனத்தை முறையாக பதிவு செய்யாதது உட்பட பிரச்னைகளால், கருத்தடை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, மீண்டும் தெருநாய்கள் பிரச்னை அதிகரித்து, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்.
கிராமத்திலும் தேவை
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலும், தெருநாய்களால், பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இறைச்சிக்கழிவுகளுக்கு அடிமையாகும் நாய்கள், சில நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை குறிவைத்து, தாக்குகின்றன.
இதனால், கால்நடை வளர்ப்போர், இரவில், துாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, கிராமங்களிலும், இத்தகைய பணிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள கோரிக்கை விடப்பட்டுள்ளது.