/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமாகும் ஓடைகள்; அலட்சியத்தில் துறைகள்! கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
/
மாயமாகும் ஓடைகள்; அலட்சியத்தில் துறைகள்! கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
மாயமாகும் ஓடைகள்; அலட்சியத்தில் துறைகள்! கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
மாயமாகும் ஓடைகள்; அலட்சியத்தில் துறைகள்! கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
ADDED : நவ 06, 2025 11:17 PM

உடுமலை: ஆக்கிரமிப்பு மற்றும் கழிவு கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ள உப்பாறு மழை நீர் ஓடைகளை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாததால், அவை சுவடு இல்லாமல் அழிந்து வருகின்றன.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு வடகிழக்கு பருவமழையே உறுதுணையாக உள்ளது. இந்த சீசனில் மட்டுமே கிராமங்களிலுள்ள நுாற்றுக்கணக்கான மழை நீர் ஓடைகளில் நீர் வரத்து இருக்கும்.
ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பணை, குளம், குட்டைகளில் தேக்கி வைக்கப்படும் மழை நீரே, அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது.
இந்த ஓடைகள் தற்போது பராமரிப்பு இல்லாமல் மாயமாகி வருகின்றன. குறிப்பாக, குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீராதாரமான உப்பாறு மழை நீர் ஓடைகள் அவல நிலையில் காணப்படுகிறது.
அம்மாபட்டி, பெதப்பம்பட்டி வழியாக செல்லும் ஓடை, உப்பாறுடன் கலக்கிறது. இந்த ஓடையின் குறுக்கே, 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஓடை பெதப்பம்பட்டி பகுதியில், சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தால் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. நாள்தோறும் பல டன் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் ஓடையின் கரையில் கொட்டப்படுகிறது.
அவை அங்குள்ள தடுப்பணை பகுதி முழுவதும் பரவிக்கிடக்கிறது. சீமை கருவேல மரங்களால் ஓடை முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. படிப்படியாக இந்த ஓடை குறுகலாகி மாயமாகி வருகிறது.
பொதுப்பணித்துறை, சோமவாரப்பட்டி ஊராட்சி, குடிமங்கலம் ஒன்றியம் என எந்த துறையினரும் ஒரு ஓடை அழிந்து வருவதை கண்டுகொள்ளவில்லை.
இதே போல் உடுமலை சுற்றுப்பகுதியில், பல ஓடைகள் மாயமாகி வருகின்றன. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கும் முன் ஓடைகளை மீட்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

