/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட கடும் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்கள்
/
குப்பை கொட்ட கடும் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்கள்
குப்பை கொட்ட கடும் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்கள்
குப்பை கொட்ட கடும் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்கள்
ADDED : நவ 12, 2025 11:44 PM

திருப்பூர்: இடுவாய் கிராமத்தில் மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், விவசாயிகள், அனைத்து கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில் குப்பையை தரம்பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில் இடுவாய், கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம் வேலம்பாளையம் ஊராட்சிகளில் மாநகராட்சியை கண்டித்து கடையடைப்பு போராட்டம், தொடர்ந்து கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டம் என, நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன், கிராம மக்கள், விவசாயிகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் என, ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். காதர்பேட்டை ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பு தலைவர் பாலசுப்ரமணியம், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், பா.ஜ. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், மங்கலம் பொன்னுசாமி, கொ.மு.தே.க. - ம.தி.மு.க. - நா.த.க. - த.வெ.க. - மா.கம்யூ. நிர்வாகிகள் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். பங்கேற்ற கிராம மக்களும், விவசாய அமைப்புகளும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.
வலுவான போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், அமைப்பு, கட்சியினர் பேசியதாவது:
இடுவாயில் குப்பை கொட்டுவதால் கரைப்புதுார் உட்பட, நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 10 கி.மீ., சுற்றளவுக்கு மேல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கால்நடைகளும் பாதிக்கப்படும். குப்பையை முறையாக தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டி வைப்பதால், நிலத்தடி நீர், சுகாதாரம் பாதிக்கப்படும்.
முக்கியமாக, குப்பையை தரம் பிரித்ததாக கூறி, கணக்கு காண்பிக்கின்றனர். இதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடக்கிறது. மாநகராட்சியில் சேகர மாகும் குப்பையை, இடுவாய் ஊராட்சியில் கொட்ட வேண்டாம். தமிழக அரசு சொல்வதை மாநகராட்சி நிர்வாகம் கேட்பதில்லை. தொடர்ந்து, போராட்டங்களை முன்னெடுத்து வரும் மக்களின் உணர்வை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
குப்பை விவகாரத்தில் கோர்ட் டுக்கு சென்றுள்ளோம். அங்கு வந்தும், மாநகராட்சி தரப்பில் பொய்யான தகவல்களை தெரிவித்து, அனுமதி பெற முனைப்பு காட்டுகின்றனர். மக்களின் குரல், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு கேட்பதில்லை. இத்தனை எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், அடுத்த கட்டத்துக்கு வலுவான போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
நல்ல தீர்வு கிடைக்கும் வரை: நாங்கள் ஓய மாட்டோம்: எதற்காக குப்பை கொட்ட அனுமதி கொடுக்க வேண்டும். நாங்கள் கொடுக்க மாட்டோம். மாநகராட்சி, மாவட்ட கலெக்டருக்கு கட்டுப்பட்டது தானே. இதற்கு முடிவு செய்யாவிட்டால், குழந்தை, கால்நடைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம். நாங்கள் மண்ணையும் காப்போம். மக்களையும் காப்போம். மண்ணை காக்க திரண்டுள்ள மக்களுக்கு நன்றி கூறுகிறோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம், ஒரு பக்கம் மக்கள் போராட்டம். இரண்டிலும் வெற்றி பெறுவோம். மக்கள் போடும் கோஷம் உங்களுக்கு கேட்கவில்லையா. நீங்கள் சுரங்கம், ஆகாயத்தில் வந்தாலும், நாங்கள் குப்பை கொட்ட விட மாட்டோம். குப்பை கொட்டமாட்டோம் என்று உத்தரவாதம் வரும் வரை, போராட்டத்தை கைவிடமாட்டோம். ஓய மாட்டோம்.
- செல்லமுத்து: உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர்.:

