/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளத்தை பாதுகாக்க போராட்டம்; காட்டுப்பன்றிகளால் கவலை
/
மக்காச்சோளத்தை பாதுகாக்க போராட்டம்; காட்டுப்பன்றிகளால் கவலை
மக்காச்சோளத்தை பாதுகாக்க போராட்டம்; காட்டுப்பன்றிகளால் கவலை
மக்காச்சோளத்தை பாதுகாக்க போராட்டம்; காட்டுப்பன்றிகளால் கவலை
ADDED : நவ 17, 2024 09:52 PM

உடுமலை; உடுமலை அருகே, மக்காச்சோள கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற, வரப்புகளில் சேலை கட்டி, இரவு நேர கண்காணிப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பி.ஏ.பி., புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, இரண்டாம் மண்டல பாசனத்தில், 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசனம் பெறுகிறது. தற்போது, பிரதானமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் பயிர் கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், சீசன் துவங்கியதும், காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக இரவு நேரங்களில், விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்துகின்றன.
புதுப்பாளையம், அடிவள்ளி, விருகல்பட்டி, அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அம்மாபட்டி, ஆமந்தகடவு உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகளால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
பாதிப்பை தவிர்க்க, வரப்பு ஓரங்களில் வண்ண சேலை கட்டுதல்; கயிறு கட்டி மருந்து தொங்க விடுதல் என பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இருப்பினும், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இதனால், இரவு நேரங்களில் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் காட்டுப்பன்றிகளை விரட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், எவ்வித பலனும் இல்லை.
விவசாயிகள் கூறியதாவது: மக்காச்சோள சாகுபடியில், ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளோம். தற்போது கதிர் பிடித்துள்ள நிலையில், காட்டுப்பன்றிகளால் சேதம் அதிகரித்துள்ளது. கதிர்களை மட்டுமல்லாது கூட்டமாக ஓடும் போது, பயிர்களை முழுவதுமாக சாய்த்து விடுகின்றன.
நாள்தோறும் துாக்கத்தை தொலைத்து, காவல் காக்க வேண்டியுள்ளது. சில இடங்களில், காட்டுப்பன்றிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. வனத்துறையினர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
காட்டுப்பன்றிகளை விரட்ட பயன்படுத்தப்படும், மருந்துகளை மானியத்தில் வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் தங்கும், மழை நீர் ஓடைகளிலுள்ள புதர்களையும், சீமை கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.