/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப் பள்ளிகளில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கல்வி புதுமை நோக்கிய மாணவர்களின் பயணம்
/
அரசுப் பள்ளிகளில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கல்வி புதுமை நோக்கிய மாணவர்களின் பயணம்
அரசுப் பள்ளிகளில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கல்வி புதுமை நோக்கிய மாணவர்களின் பயணம்
அரசுப் பள்ளிகளில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கல்வி புதுமை நோக்கிய மாணவர்களின் பயணம்
ADDED : அக் 19, 2024 11:37 PM
கல்வி குறித்த சிந்தனை பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. பண்டைய காலத்தில், கல்வி கற்றுத்தரும் குருவின் ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடை செய்து கொண்டே கல்வி பயின்றனர். பின், பள்ளிக்கல்வி என்கிற கட்டமைப்புக்குள் மாணவ சமுதாயத்தினர் கொண்டு வரப்பட்டனர்.கரும்பலகையில் ஆசிரியர்கள் எழுதுவதை, சிலேட்டு பென்சிலில் எழுதி பழகிய ஆரம்பக்கல்வி அனுபவத்தை மறந்திருக்க முடியாது. பின், நோட்டு, புத்தக பயன்பாடு என, கல்வி கற்கும் முறையும், கற்பிக்கும் முறையும் மாறிக் கொண்டே வருகிறது. தற்போது, ஒதுக்குப்புற கிராமப்புறங்கள் துவங்கி, நகர் புறங்கள் வரையுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, கம்ப்யூட்டர், இணையதளம் சார்ந்த கல்வி போதிக்கப்படுகிறது.
புதுமை கற்றல் முறை
சுரேஷ்குமார், மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர்: 21ம் நுாற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. மாணவர்களுக்கு பாரம்பரிய கல்வியை வழங்குவது ஒருபுறம் இருந்தாலும், தற்போதைய மாணவகள், புதுமையை விரும்புகின்றனர். மாணவர்கள் மொபைல் போன் வாயிலாக, தொழில் நுட்பத்தை வேகமாக கற்று வருகின்றனர்; சிறு வயதிலேயே பிரத்யேக 'செயலி' உருவாக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளும் தற்போது பள்ளிகளில் 'ஸ்மார்ட் போர்டு' அறிமுகப்படுத்தி வருகின்றன. உயர்நிலை பள்ளிகளில், 10 கம்ப்யூட்டர், மேல்நிலை பள்ளிகளில், 20 கம்ப்யூட்டர் உள்ளிடக்கிய 'உயர்கல்வி ஆய்வகம்' அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெ.இ.இ., உள்ளிட்ட பல போட்டி தேர்வுகள் 'ஆன்லைன்' வாயிலாகவே நடத்தப்படுகின்றன; உடனுக்குடன் 'ரிசல்ட்' தெரிவித்து விடுகின்றனர். புதுமையான கற்றல் முறையை நோக்கி, கல்வித்துறை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
உயர்நுட்ப ஆய்வகங்கள்
கண்ணன், உதவித் தலைமையாசிரியர், நஞ்சப்பா அரசு மேல்நிலைப்பள்ளி: வரும் காலங்களில், தேர்வெழுதும் மாணவர்களின் மதிப்பீடு அனைத்தும் கம்ப்யூட்டர் வாயிலாக தான் மேற்கொள்ளப்படும் என்கிற நிலை உருவாகப் போகிறது. அதற்கேற்ப தற்போது, பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கல்வி போதிக்கப்படுகிறது. அனைத்து அரசுப்பள்ளிகளிலும், 'ஸ்மார்ட் போர்டு' வாயிலாக கல்வி போதிக்கப்படுகிறது. உயர்வேக திறன் கொண்ட இன்டர்நெட் உதவியுடன், 'ைஹடெக் லேப்' உருவாக்கப்பட்டுள்ளது. இக்கல்வி முறை வாயிலாக மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன், மொழிப்புலமை, பேசும் திறன் உள்ளிட்டவை மேம்படுகிறது. வரும் காலங்களில் 'அப்கிரேடு' செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆய்வகங்களை பள்ளிகளில் உருவாக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.
கற்றல்திறன் மேம்பாடு
திருப்பூர், 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், அக்ஷயா டிரஸ்ட உதவியுடன், 8 வகுப்பறையில் அழகுற வர்ணம் தீட்டி, ஸ்மார்ட் போர்டு வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.
பள்ளி தலைமையாசிரியர் ராதாமணி கூறியதாவது: புத்தகம் வாயிலாக மட்டுமின்றி, இணைய வழி வாயிலான கற்றல் முறையால், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்துக் கொள்கின்றனர்; இத்தகைய நவீன கல்வி முறையால், மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகின்றனர். வீட்டுப்பாடம் உள்ளிட்டவையும் 'ஆன் லைன்' வாயிலாக வழங்கப்படுவதால் ஆர்வமுடன் படிக்கின்றனர்; அவர்களின் கற்றல் திறன் மேம்படுகிறது. அரசின் சார்பில் உயர், மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமின்றி, அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் 'ைஹடெக் ஆய்வகம்' உருவாக்கப்பட உள்ளது.
டிஜிட்டல் கட்டமைப்பு தேவை
கல்லுாரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஸ்மார்ட் போடு உள்ளிட்ட ைஹடெக் கல்வி போதிப்பு முறையை, கல்லுாரிகளிலும் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கல்லுாரி ஆசிரியர்கள் சிலர், தங்களது சொந்த விருப்பம், முயற்சியல் சொந்த லேப்டாப் பயன்படுத்தி, டிஜிட்டல் திரையில் பாடம் பயிற்றுவிக்கின்றனர்; இதற்கு, பள்ளி முதல்வரின் அனுமதி பெற வேண்டும்; டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இது, நடைமுறையில் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே, அரசின் சார்பிலேயே நவீன தொழில்நுட்ப கல்வியை வழங்குவது சிறந்தது.
ஊக்குவித்த அரசு
நாட்டின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் பொருட்டு, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், கடந்த, 2016ம் ஆண்டு முதலே ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. தேசிய அளவில் தகவல் தொழில்நுட்ப கற்பித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி விருதும் வழங்கியது. கடந்த, 2016ல் நடந்த போட்டியில், தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, 11 ஆசிரியர்களில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, தேனாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் தர்மராஜ் என்பவரும் ஒருவர். அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் விருது பெற்றார்.
ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது: மின்வசதி இல்லாத பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 'லேப் டாப்' பயன்படுத்தி, டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், அனிமேஷன் முறையில் கல்வி வழங்கினோம். அதன் விளைவாக, மாணவர் சேர்க்கை அதிகரித்தது; மாணவர்களின் இடைநிற்றல் குறைந்தது. தற்போது, அரசின் சார்பில், அனைத்து பள்ளிகளிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறை கல்வியை அரசு வழங்குகிறது; இதனால், கல்வித்தரம் மேம்படும். தற்போது, ஒரு 'ஸ்மார்ட் வகுப்பறை' எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைத்து வருகிறேன். வகுப்பறைக்குள் நுழைந்தாலே வேறு உலகத்துக்கு செல்லும் உணர்வு ஏற்படும்.