/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண்துறையின் மானிய திட்டங்கள்; இணை இயக்குனர் ஆய்வு
/
வேளாண்துறையின் மானிய திட்டங்கள்; இணை இயக்குனர் ஆய்வு
வேளாண்துறையின் மானிய திட்டங்கள்; இணை இயக்குனர் ஆய்வு
வேளாண்துறையின் மானிய திட்டங்கள்; இணை இயக்குனர் ஆய்வு
ADDED : டிச 25, 2024 08:17 PM

உடுமலை ; குடிமங்கலம் வட்டாரத்தில், வேளாண்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார்.
குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், சோளம், உளுந்து, கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வட்டாரத்தில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்ட செயல்பாடுகள் குறித்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல் நேரடி ஆய்வு செய்தார். உளுந்து, வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து, தரமான விதைகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், 2021-22ம் ஆண்டில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், வினியோகம் செய்யப்பட்ட மகாகனி, தேக்கு மரக்கன்றுகளின் வளர்ச்சியை பார்வையிட்டார். தொடர்ந்து, வேளாண் விரிவாக்க மைய கிடங்கை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தேவையான சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, தட்டை விதைகள் இருப்பு விபரத்தை கேட்டறிந்தார்.
நுண்ணுயிர், நுண்ணுாட்ட உரங்கள் இருப்பை ஆய்வு செய்து, பயனாளிகளை தேர்வு செய்து வினியோகிக்க அறிவுறுத்தினார். அனைத்து நிலை அலுவலர்களிடமும் திட்ட இலக்கினை விரைந்து செயல்படுத்த வழிகாட்டுதல் வழங்கினார்.
ஆய்வின் போது, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, வேளாண் அலுவலர் சுனில்கவுசிக், உதவி வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.