/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமற்ற சாலைப்பணி; தடுத்து நிறுத்திய பா.ஜ.,வினர்
/
தரமற்ற சாலைப்பணி; தடுத்து நிறுத்திய பா.ஜ.,வினர்
ADDED : பிப் 03, 2024 12:23 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி சார்பில் ரோடு போடும் பணி தரமற்ற முறையில் நடப்பதாக கூறி, பா.ஜ.,வினர் திரண்டு பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாவிபாளையம் பகுதியில் தார் ரோடு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் மோசமான நிலையில் இருந்த ரோடு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது சீரமைப்பு செய்யும் வகையில் பணி துவங்கியது.
இப்பணி தரமற்ற முறையில் நடப்பதாகவும், தார் கலவையின்றி வெறும் ஜல்லிக்கற்களைக் கொண்டு ரோடு போடுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரி வித்தனர். இதையடுத்து பா.ஜ.,வைச் சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டு, ரோடு தரமற்ற முறையில் போடுவதைக் கண்டறிந்தனர். பணிக்கு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர். மாநகராட்சி அலுவலர்கள் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் நீண்ட நேரம் அழைப்பு விடுத்தும் உரிய அலுவலர்கள் வரவில்லை.
பொறுமையிழந்த பொதுமக்கள் ரோடு மறியல் செய்ய முயன்றனர். அதன் பின் போலீசார் அலுவலரை எச்சரித்து வரவழைத்தனர்.அங்கு வந்த உதவி பொறியாளர் முனியாண்டி பணிகளை ஆய்வு செய்து உரிய வகையில் ரோடு அமைக்க உறுதி அளித்தார்.
அதன் பின்பே தார் கலவை கொண்டு வந்து ஊற்றி ரோடு பணி துவங்கியது.இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.

