ADDED : ஜன 20, 2025 05:02 AM
திருப்பூர்,: திருப்பூரில், காலையில் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை வேளையில் பனிப்பொழிவு காரணமாக குளிர்ந்த சீதாஷ்ண நிலை நிலவிவருகிறது.
நேற்றுமுன்தினம், மாவட்டத்தில், தாராபுரம், குண்டடம், உப்பாறு அணை, உடுமலை, திருமூர்த்தி அணை, மடத்துக்குளம் பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 3.20 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. திருப்பூர் நகர பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. சில இடங்களில், காலை, 8:00 மணி முதலே, லேசான துாறல் மழை பெய்தது. மீண்டும் மதியம், 2:30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். திடீர் மழையால், திருப்பூரில் குளிர் மேலும் அதிகரித்துள்ளது.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், ரோட்டோர கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். திடீர் மழையால், நேற்று வர்த்தக நிறுவனங்களில் வாடிக்கையாளர் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.