ADDED : நவ 20, 2024 11:09 PM

பல்லடம்; ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சிம்மபுரி பகுதியில் உள்ள வீதிகளில் போடப்பட்டுள்ள ரோடு, மழையால் கரைந்து, வாய்க்காலாக மாறியுள்ளது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
ஆரம்ப காலத்தில் 'சைட்கள்' விற்பனை செய்யப்படும் போது அரைகுறையாக போடப்பட்ட ரோடு, சிறிதுசிறிதாக கரைந்து, தற்போது, மண் தடமாக மாறிவிட்டது. ஓரிரு இடங்களில் ஒட்டிக்கொண்டு உள்ள ஜல்லிக்கற்க்களும், தொடர்ச்சியாக பெய்து வரும் மழையில் கரைந்து வருகின்றன. இப்பகுதியில் காலியாக உள்ள நிலங்களில், மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதுடன், வழித்தடங்கள் பி.ஏ.பி., வாய்க்கால் போன்று மாறிவிட்டன.
இதனால், வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால், வீட்டின் சுவர்களும் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும், தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. மழை தொடர்ந்து பெய்து வருவதால், தண்ணீர் ரோட்டில் வடியாமல் தேங்கி நிற்கிறது.
மழைநீர் வடிந்த செல்ல தற்காலிகமாக வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், மழைநீர் செல்ல பாதை ஏற்படுத்துவதுடன், மண் பாதையாக உள்ள வீதிகளில் ரோடு போட வேண்டும். இது குறித்து ஊராட்சியில், பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.