நேற்று மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கரும்புகள் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தென்னம்பாளையம், அருள்புரம், சந்தைபேட்டை, மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், மாநகராட்சி அலுவலகம் முன், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, தாராபுரம் ரோடு, புதுார்பிரிவு உள்ளிட்ட இடங்களில் கரும்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டன. உயரம் அதிகமான முதல்தர கரும்பு, ஜோடி, 120 ரூபாய்க்கும், உயரம் குறைந்த இரண்டாம் தர கரும்பு, ஜோடி, 80 ரூபாய்க்கும் விற்றது. முதல் நாள் என்பதால், விலை சற்று உயர்வாக இருப்பதாகவும், பொங்கல் நாளில் சற்று விலை குறையும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். மஞ்சள் கொத்து, 20 முதல், 40 ரூபாய், தரமானதாக இருந்தால், 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மார்கழி துவங்கியது முதல் பனி காரண மாக பூக்கள் வரத்து குறைந்து, விலையும் உயர்ந்தது. புத்தாண்டை முன்னிட்டு உயர்ந்த விலை கடந்து, 15 நாட்களாக குறையாமல் தொடர்கிறது. நாளை பொங்கல் பண்டிகை என்பதால், நேற்று மல்லிகை பூ கிலோ, 1,600 ரூபாய், காக்கடா, 1,100 ரூபாய், அரளி, 250 ரூபாய், சம்பங்கி, 300 ரூபாய், செவ்வந்தி, 250 ரூபாய்க்கு விற்றது.
மற்ற பூக்களை விட அதிகளவில் செவ்வந்தி பூக்கள் வந்திருந்தது. விலையும் குறைவு என்பதால், பொதுமக்கள் அதிகளவில் செவ்வந்தி பூக்களை வாங்கிச் சென்றனர்.