/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலநிலை பிறழ்வில் பறிபோன கோடை 'கொண்டாட்டம்'
/
காலநிலை பிறழ்வில் பறிபோன கோடை 'கொண்டாட்டம்'
ADDED : மே 24, 2025 05:59 AM
''அய்ய்யோ...இந்த வெயில் ஆகாதுப்பா. வெளியில தலைக்காட்ட முடியல. என்ன ஒரு வெயில். இனி, அக்னி நட்சத்திரம் வேற தொடங்குதாமே... வெயில் வாட்டி வதைக்கும் போலயே... எப்போ தான் வெயில் குறையுமோ... இனி ஒரு மாசம் சமாளிக்கணும் போலயே...''
இப்படியான புலம்பலுடன் தான் கோடை காலத்தை வரவேற்கிறோம். உடல் முழுக்க வியர்வை ஊற்றெடுக்க தான், கோடை காலத்தை கடந்தும் செல்கிறோம். 80 முதல், 100 டிகிரி பாரன்ஹீட்டில் உடல் தகிக்க, குளிர்ச்சி தரும் பானங்களை பருகி, வெப்பத்தை தகித்துக் கொள்கிறோம். காலை, மாலை என, இரு நேர குளியல். ''இப்படி திண்டாட வைத்தாலும் கோடை காலம் என்பது, கொண்டாட்டத்துக்குரியதும் தான்; இயற்கை கற்பிக்கும் பாடமும் இதுதான்,'' என்கிறார், சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாம், அதிகபட்சம் 90 முதல், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வாழ்ந்து பழகிவிட்டோம்; 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுடும் போது, உடலை குளிர்ச்சிப்படுத்திக் கொண்டு அதையும் தாங்குகிறோம். இந்த வெப்பம் தான், அடுத்த ஓராண்டுக்கான நோய் எதிர்ப்பாற்றல் சக்தியாக இருக்கிறது. ஆனால், இம்முறை கோடையை இழந்தோம்; அக்னி நட்சத்திரத்தின் சுடுதலை, மழை தணித்துவிட்டது.
கோடையை இழப்பது என்பது, இயற்கைக்கும் முரணானது தான். கோடை காலத்தில் வெயில் இல்லாத போது, மரம், செடி, கொடிகளில் பூக்கள் அதிகமாக பூக்காது; உதிர்ந்து விடும்; இதனால், காய்கள் அதிகம் காய்க்காது; கனிகளும் கிடைக்காது; இதனால், விதைகளும் கிடைக்காது. அடுத்தாண்டுக்கான பசுமைப்பரவலுக்கு விதைகள் கிடைக்காமல் போய் விடும்.
பூக்கள் இல்லாத போது, மகரந்த சேர்க்கைக்கு துணைபுரியும் தேனீ மற்றும் தேன் உண்ணும் பூச்சிகளுக்கு உணவில்லாமல் போய்விடுகிறது. பழம் உண்ணும் பறவைகளுக்கு பழம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால், அவற்றின் எச்சத்தால் ஏற்படும் விதைப்பரவலும் இல்லாமல் போகும்; இதனால், உணவு பஞ்சம் மட்டுமின்றி, பசுமைப்பரப்புக்கும் பாதிப்பு ஏற்படும். கோடையை இழந்திருப்பதும் காலநிலை பிறழ்வு தான்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த வெப்பம் தான், அடுத்த ஓராண்டுக்கான நோய் எதிர்ப்பாற்றல் சக்தியாக இருக்கிறது. ஆனால், இம்முறை கோடையை இழந்தோம்; அக்னி நட்சத்திரத்தின் சுடுதலை, மழை தணித்துவிட்டது

