/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைதுாக்கும் வறட்சி நிலை; கைகொடுக்கும் கோடை மழை
/
தலைதுாக்கும் வறட்சி நிலை; கைகொடுக்கும் கோடை மழை
UPDATED : மே 15, 2025 07:16 AM
ADDED : மே 14, 2025 11:12 PM

திருப்பூர்,; கோடையின் சுடுதல் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை துாக்க துவங்கியிருக்கிறது.
கோடை காலம் துவங்கினாலே, தண்ணீருக்கு தவம் இருக்க வேண்டிய நிலை பல இடங்களில் ஏற்படும். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்ட பவானி ஆற்றுநீரை நம்பி தான், குடிநீர் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோடையில் மழைப்பொழிவு குறையும் பட்சத்தில் நீர் வரத்து குறைந்து, வினியோகம் பாதிக்கும்.
பல்வேறு புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், பல இடங்களில் நீர் வினியோகம் சீராக இல்லை என்ற புலம்பல் மக்கள் மத்தியில் உள்ளது. பிரதான குழாயில் வால்வுகள் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து வழிந்து வரும் நீரை கூட, குடங்களில் சேகரித்து பயன்படுத்தும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது.இருப்பினும், அவ்வப்போது பெய்யும் கோடை மழை, சற்றே ஆறுதலை தருகிறது.
மழைநீர் தான் உயிர் நீர் என்பதை மக்கள் உணர்கின்றனர். 'கோடை வறட்சியில் இருந்து மக்கள் தப்பிக்க வேண்டும்' என்ற நோக்கில் தான், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை மாநில அரசு ஊக்குவித்தது. ஆனால், அதில் மக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. மழைநீர் பெருமளவில் வீணாகி, சாலைகளில் வழிந்தோடி செல்வதை தான் பார்க்க முடிகிறது. வறட்சியில் தான் தண்ணீரின் அருமை தெரியும் என்ற யதார்த்த நிலையில், வரும் நாட்களிலாவது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அரசு இயந்திரங்கள் ஊக்குவிக்க வேண்டும்; கட்டாயப்படுத்த வேண்டும்.