/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நசுக்கப்படும் கருத்துரிமை: ஹிந்து முன்னணி கண்டனம்
/
நசுக்கப்படும் கருத்துரிமை: ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : ஜன 30, 2024 12:39 AM
திருப்பூர்;தமிழகத்தில் கருத்துரிமை சுதந்திரம் நசுக்கப்பட காரணமாக உள்ள தி.மு.க., அரசுக்கு ஹிந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சமீபகாலமாக ஆளும் தி.மு.க., அரசையோ அல்லது சிறுபான்மையினரையோ யாரேனும் விமர்சித்தால், உடனடியாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கும், கருத்துரிமைக்கும் அனுமதி உண்டு என்பதை மறந்து தமிழக அரசு செயல்படுகிறது.
சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தினை பதிவிட்டார் என்று பா.ஜ., ஊடகபிரிவு மாநில செயலாளர் புகழ் மச்சேந்திரன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து, அதிகாலையில் அவரது வீட்டுக்கு சென்று கைது செய்துள்ளது காவல்துறை. ஆனால், சமுதாய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் மதக்கலவரத்தை துாண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு திராணியில்லை.
தி.மு.க.,வின் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கடந்த, 22ம் தேதி தன்னுடைய சமூக வலைதளத்தில் ராமருக்கு பிடித்த மாட்டுக்கறி பிரியாணி ரெடிஎன்று பதிவிட்டு இருந்தார். அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. இவர் மீது புகார் கொடுத்த ஹிந்து இயக்க பிரமுகர்கள் மீது பொய்யான புனைவுகளை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
பத்திரிகை மற்றும் ஊடகங்கள் என்பது அன்றாட நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு ஜனநாயக கருவி. அவர்களின் சுதந்திரத்தை கூட முடக்குகிறது தமிழக அரசு. ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டது. கோவில்களில் அன்னதானம் கூடாது, பஜனைகள் செய்யகூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருந்தது தி.மு.க., அரசு.
இதனை பகிரங்கமாக செய்தி வெளியிட்டது 'தினமலர்' பத்திரிகை. எப்படியாவது 'தினமலர்'பத்திரிகையை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கோடு வழக்குபதிவு செய்தது காவல்துறை. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்ய கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பளித்தும் கூட, கோர்ட்டை மதிக்காத தி.மு.க., அரசு, ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் வகையில் கருத்துரையை பறிக்கிறது. இத்தகைய பழிவாங்கும் படலத்தை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.