ADDED : பிப் 21, 2025 12:21 AM

திருப்பூர்; திருப்பூர், சூசையாபுரம் பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக ரோட்டில் குழி தோண்டி குழாய் பதிக்கப்பட்டது.
குழாய் பதிப்பு பணிகள் முடிந்த பின், குழிகள் மூடப்படவில்லை. வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நடந்து செல்வோரும், ரோட்டில் விளையாட வரும் சிறுவர்களும் குழிகள் காரணமாக தவறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது.
குழி தோண்டும் பணியின் போது கழிவுநீர் குழாய்கள் சில இடங்களில் உடைந்து, கழிவு நீர் வெளியேறியும் சிரமம் நிலவுகிறது. ஆவேசமடைந்த அப்பகுதியினர் நேற்று ராயபுரம் ரோட்டில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். வடக்கு போலீசார் அங்கு விரைந்தனர். மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. பின், மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்தனர்.

